அமெரிக்காவில் தெரசா ரோட்ரிக்ஸ் (வயது 29) என்ற பெண், 1992-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவரது கணவரும், கணவரின் சகோதரரும் கூலிப்படை கொலையாளியாக ரோலண்ட் ரூயிஸ் (44) என்பவரை அமர்த்தி, 2 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம்) கூலி கொடுத்து, தெரசாவை கொலை செய்ய வைத்ததை போலீசார் புலன்விசாரணையில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு, ரோலண்ட் ரூயிசுக்கு மரண தண்டனை விதித்தது. தெரசாவின் கணவருக்கும், கணவரின் சகோதரருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்தது.
ரோலண்ட் ரூயிஸ் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சுமார் 25 ஆண்டு காலம் சட்டப்போராட்டம் நடத்தினார். எதுவும் பலன் அளிக்கவில்லை. அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு, அவர் மீதான மரண தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து ரோலண்ட் ரூயிசுக்கு ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் உள்ள சிறையில் விஷ ஊசி போட்டு மரண தண்டனையை நேற்று நிறைவேற்றினர்.
இந்த படுகொலையில் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம், தெரசாவின் பெயரிலான 4 லட்சம் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.2 கோடியே 68 லட்சம்) காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காகத்தான் அவரது கணவரும், கணவரின் சகோதரரும் கூட்டுச்சதி செய்து, கொலையாளியை அமர்த்தி கொலை செய்து மாட்டிக்கொண்டனர் என்பதுதான்.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னதாக ரோலண்ட் ரூயிஸ் ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “நான் இந்த கொலையை செய்து விட்டு எந்தளவுக்கு மன வருத்தம் அடைந்திருக்கிறேன் என்பதை சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது” என கூறி, தெரசா குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.