அல்லாஹ்வின் துணையால் முஸ்லிம்கள் பத்ரு போரில் மிகத் துணிவுடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். “அதிசீக்கிரத்தில் இந்தக் கூட்டம் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவார்கள்” என்ற இறை வசனத்தை நபிகளார் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம்கள் கூடுதல் உற்சாகம் பெற்றனர்.
அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரலி), துணிந்து முன்னேறி வீர மரணத்தைத் தழுவினார். குறைஷிகளைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் கைது செய்யப்பட்டு நபிகளாரிடம் கொண்டு வரப்பட்டார். முஸ்லிம்கள் வாளை தூக்கினாலே எதிரிகள் மடிந்து சாய்ந்தனர். வானவர்கள் முஸ்லிம் வீரர்களுக்குப் பின்னிருந்து இயக்குவதை எதிரிகள் விளங்கிக் கொண்டனர்.
“இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்குத் துணையாக இருக்கின்றேன்!” என்று போரின் ஆரம்பத்தில் ஷைத்தான் கூறினான். குறைஷிகளை வழிகெடுத்த ஷைத்தான், இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது புறங்காட்டிப் பின்சென்று, “மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று ஓடி மறைந்தான். இதுவும் திருக்குர்ஆனில் தெள்ளத்தெளிவாக வந்துள்ள வசனமாகும்.
எதிரிகளின் அணியில் பயம் தொற்றிக் கொண்டது. சலசலப்பும், திகிலும் தோல்வியின் அடையாளங்களாக வெளிப்பட்டன. ஆனால் அபூஜஹ்லின் வீம்பு, அந்த ஷைத்தானின் குணம் மாறாமல் அப்படியே பெருமையுடன் குறைஷிகளைச் சமாதானப்படுத்திக் கொண்டும், உற்சாகப்படுத்திக் கொண்டும் இருந்தான். “இறந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னேறிச் செல்லுங்கள்.
முஸ்லிம்களைக் கொல்லக்கூட வேண்டாம் கைதிகளாக்கி பிடித்து வாருங்கள் போதும்” என்று குதிரையின் மீது அமர்ந்தபடி கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். அப்போது இளம் வயது அன்சாரி சிறுவர்களான முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) மற்றும் முஆத் பின் அஃப்ரா (ரலி) இருவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் “எங்களுக்கு யார் அபூஜஹ்ல் என்று காட்டுவீர்களா?” என்று கேட்டனர். “எதற்காகக் கேட்கிறீர்கள்” என்று வியப்பாக அப்துர் ரஹ்மான் (ரலி) கேட்க, அதற்கு அச்சிறுவர்கள் “நபிகளாரை வசைபாடும் அவனை எங்கள் கைகளால் வெட்டிச் சாய்க்க வேண்டும்.
அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்போம்” என்றனர். மக்களிடையே பம்பரமாகச் சுற்றித் திரியும் அபூஜஹ்லை அப்துர் ரஹ்மான் அடையாளம் காட்டியதுதான் தாமதம், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அபூஜஹ்லை நோக்கிச் சென்று அவன் சுதாரிக்கும் முன் தம்மிடமிருந்த வாட்களால் அவனை வெட்டிச் சாய்த்தனர்.
அரண் அமைத்து யாரும் நெருங்க முடியாத இடத்திலிருந்த அபூஜஹ்லை கரண்டைக் கால்களில் வெட்டித் தகர்த்து வீழ்த்தியதை அபூஜஹ்லின் மகன் இக்மா பார்த்துவிட்டு பாய்ந்து முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களை வெட்டினான். இருப்பினும் உயிரைப் பிடித்துக் கொண்டு போராடி. அபூஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியை நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களிடம் சென்று தெரிவித்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் அவனைக் கொன்றார்?” என்று கேட்டார்கள். இருவருமே “நான்தான் கொன்றேன்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் வாட்களில் படிந்த அவனது இரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் “இல்லை” என்று பதிலுரைத்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரு வாட்களையும் கூர்ந்து பார்த்துவிட்டு, “நீங்கள் இருவருமே அவனை வெட்டிக் கொன்றிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.
முதலில் வெட்டியவர் என்ற அடிப்படையில் முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹுக்கே அபூஜஹ்லின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்று உரியவையைத் தந்தார்கள். முஆத் பின் அஃப்ரா (ரலி) வீரமரணம் அடைந்தார்.
குறைஷிகள் தங்களது இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றவுடன் சிதறி ஓடிப் பதுங்கினர். முஸ்லிம்கள் அவர்களைப் பின்தொடர்ந்து கைது செய்தனர். உடனே அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் ‘இஸ்லாம் எனும் இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. எனவே, இந்த இறைத் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள்’ என்று கூறி வெளித்தோற்றத்தில் இஸ்லாத்தை எற்றனர்.