தவக்கால சிந்தனைகள்: நலமான வாழ்வு தரும் நோன்பு

தவக்காலத்தில் நோன்பை கடைப்பிடித்தல் என்பது அவசியமானது. இஸ்லாமியர் ரம்ஜான் காலத்தில் 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். அதுபோல யூதர்களும் சில நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 40 நாட்கள் செபத்திலும், தவத்திலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தர்மம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒருசந்தி, உபவாசம் இருக்க ஒவ்வொரு மதமும் வலியுறுத்தும் வழிமுறைகள் வெவ்வேறாக இருக்கிறது. ஆனால் நோக்கம் ஒன்றுதான். மக்கள் தவத்தின் அடையாளமாக செபமாலை அணிந்து, காவி உடை உடுத்துகிறார்கள். இந்து மதத்தில் திருப்பாவை வலியுறுத்துவது, “பால் உண்ணோம், நெய்யுண்ணோம்“. அவ்வாறு உண்ணாது இருக்கும் போது பசியின் அனுபவத்தை பெறுகிறோம். அந்த அனுபவம் பசியாக வாடுவோருக்கு உணவு கொடுக்க நம்மை தூண்டுகிறது. நோன்பின் உன்னதமான நிலையிது.

பசித்தவர்க்கு உணவு கொடுக்கவில்லை என்றால் நாம் கடைபிடிக்கும் சடங்கு பயனற்றதாகும். அதுபோல ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை வழங்குதல் வேண்டும். ஏழைகள் மீது இரக்கம் காட்ட பயிற்சி பெற்று, இறைவன் திருவுளத்தை செபத்தால் தெரிந்து அதன்படி நடப்பது நோன்பின் உண்மைத்தன்மையின் வெளிப்பாடு. நம் வாழ்வின் நலனுக்காகவும், பிறர் வாழ்வின் நலனுக்காகவும் நாம் நோன்பைக் கடைபிடிப்போம்.

நோன்பு என்பது உடல் நோய் நீங்க நல்லதொரு பயிற்சியாக இருக்கிறது. புலன்களை கட்டுப்படுத்தி இறைவனை நோக்கி பயணிக்க உதவுகிறது. சோதனைகளை எதிர்கொள்ள சக்தியை தருகிறது. தவக்காலத்தில் அதிகமாக உண்ணுதல், இன்பங்கள், சுகங்கள், பொழுது போக்குதலில் நேரத்தை, காலத்தை வீணாக்குவதை குறைத்து கொள்ள வேண்டும். அதுபோன்ற சூழல்கள், பொருட்கள், இடங்கள், ஆட்களை தவக்காலத்தில் தவிர்க்க வேண்டும்.

இதுவே தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும். அதற்கான முயற்சியை மேற்கொள்வோம். இறையாசீர் பெறுவோம்.