திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கி.பி.1788-1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி செய்யும்) மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்ரகமும் அமைத்து வழிபட்டனர். அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது.
அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன் இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளிவருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள். அப்பெயரே காலப்போக்கில் நிலைத்து விட்டது.
இந்த கோவிலின் கருவறை ஆரம்பத்தில் வெறும் மண்ணால் கட்டப்பட்டிருந்தது. பீடம் மட்டுமே இருந்த இடத்தில் பிற்காலத்தில் அம்மனின் மூலசிலை அமைக்கப்பட்டது. அந்த மூல உருவ சிலையை தனியாக எடுக்க இயலாது. அந்த சிலை தரையோடு தரையாக வெகு ஆழத்தில் புதைந்துள்ளது. இந்த சிலை சுமார் 300 ஆண்டுகள் தொன்மையானது. ஆவுடையார் பீடத்தில் வலது கால் தொங்க விட்டபடி இடது காலை மடக்கி அம்மன் அமர்ந்த நிலையில் உள்ளது. காளி அம்மன் போல் கோரைப்பற்கள் உள்ளது. அதனால் இந்த அம்மன் காளி அம்சம் பொருந்திய மாரியம்மன் ஆவாள்.
அம்மனுக்கு எட்டு கைகளும், வலது பக்கம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதமும், இடது பக்கம் அரிவாள், வில், மணி, கிண்ணம் போன்றவைகளும் காணப்படுகின்றன. இந்த சிலையின் பின் பக்கத்தில் ஒரு துவாரம் உள்ளது. இது அம்மனுக்கே உரிய சிறப்பு என ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டு வியந்துள்ளார்.
திருக்கோவிலின் தோற்றம் :
கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு இதுவரை 3 முறை கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோவிலின் அம்மன் சிலையை ஒட்டி முன்புறத்தின் தெற்கு பக்கம் விநாயகர் சன்னதியும், வடக்கு பக்கம் மதுரை வீரன் சாமி சன்னதியும் உள்ளது. சன்னதியின் முன்புறம் வடகிழக்கில் நவக்கிரகங்கள் உள்ளன.
பின்பக்கத்தின் தென்புறம் முனீஸ்வரசாமி சன்னதியும், வடபுறம் கருப்பணசாமி சன்னதியும் உள்ளது. இதுதவிர கோவிலின் நுழைவு வாயில், அலங்கார மண்டபம், அர்த்த மண்டபம், கோவில் வளாகத்தில் உள்ள சிங்க வாகனம், கொலு மண்டபம், கலையரங்கம், திருமண மண்டபம், உணவு கூடம், தங்கத்தேர் ஓடு பாதை, முடி காணிக்கை செலுத்துமிடம் உள்பட ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.