பக்தர்களின் துன்பங்களை போக்கிய சாய்பாபா

எனது தர்பார் எப்போதும் திறந்தே இருக்கும்.
யார் வேண்டுமானாலும், எப்போது
வேண்டுமானாலும் என்னிடம் வந்து பேசலாம்
என்றார் சீரடி சாய்பாபா.

இதை அவர் செயலிலும் நடத்திக் காட்டினார். அவரை ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் சாதாரணமாக, மிக எளிதாக சந்தித்தனர்.

அவர் செயல்பாடுகளும் வெளிப்படையாக இருந்தன. அவர் ஒரு திறந்த புத்தகமாக இருந்தார்.

அவர் ஒரு போதும் எந்த எதிர்பார்ப்புகளுடனும் இருந்ததே இல்லை. எதிர்காலத்தில் நடக்கப் போவதை அவர் சூசகமாகவும் நேரிடையாகவும் சொல்லத் தவறியது இல்லை.

அந்த வகையில் அவர் இந்தியா, ஆங்கிலேயர்களிடம் இருந்து எப்படி விடுதலை பெறும் என்பதை ஒரு தடவை வெளிப்படுத்தினார். 1916-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் அந்த தீர்க்க தரிசனத்தைக் கூறினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பாலகங்காதர திலகர், பண்டிதர் மதன்மோகன் மாளவியா, ஸ்ரீயோகி சுத்தானந்த பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள், தங்களுக்குள் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த னர். தலைவர்கள் பேசியதை அவர்கள் யாருமே காது கொடுத்து கேட்கவில்லை. இதனால் கூட்டத்தில் ஒரு கூச்சலாக இருந்தது.

இதனால் ஸ்ரீயோகி சுத்தானந்த பாரதி வேதனை அடைந்தார். அவர் எழுந்து, “இப்படி ஆளாலுக்கு சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தால் சுயராஜ்ஜியத்தை ஒரு போதும் அடைய முடியாது” என்றார்.

உடனே பாலகங்காதர திலகர், “அப்படியானால் நமக்கு விடுதலை எப்படி கிடைக்கும்?” என்றார். அதற்கு ஸ்ரீயோகி சுத்தானந்த பாரதி, “மகாத்மாக்களின் நினைவாற்றாலும், ஆசியாலும்தான் கிடைக்கும்“ என்றார்.

இதைக் கேட்டதும் திலகர், “அத்தகைய மகாத்மா யாராவது, எங்காவது இருக்கிறாரா?” என்றார். உடனே ஸ்ரீயோகி சுத்தானந்த பாரதி, “ஒரு மகாத்மா இருக்கிறார். அவர் சீரடியில் இருக்கும் சாய்பாபா” என்றார்.

இதையடுத்து இந்தியா சுதந்திரம் பெறுவது தொடர்பாக சாய்பாபாவிடம் கேட்க அவர்கள் முடிவு செய்தனர். மறுநாள் பாலகங்காதர திலகர், மதன்மோகன் மாளவியா, ஸ்ரீயோகி சுத்தானந்த பாரதி மூவரும் லக்னோவில் இருந்து சீரடிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மறுநாள் காலை 7 மணிக்கு அவர்கள் சீரடி சென்று சேர்ந்தனர். அங்குள்ள ஒரு விடுதியில் குளித்து விட்டு துவாரகமாயி மசூதிக்கு சென்றனர்.

அப்போது பாபா அருகில் உள்ள வேப்ப மரத்துக்கு சென்று அமர்ந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவரும் வேப்ப மரத்தடிக்கு சென்றனர்.

சாய்பாபா அவர்கள் மூவரையும் அன்போடு அழைத்து ஆசி வழங்கினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீயோகி சுத்தானந்தபாரதி இந்தியில் ஒரு பாட்டுப் பாடினார்.

பாடல் முடிந்ததும் அவரைப் பார்த்து சாய்பாபா சிரித்தார். பிறகு அவர், “இப்படி ஆள் ஆளுக்கு சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தால் சுயராஜ்ஜியத்தை ஒரு போதும் அடைய முடியாது” என்றார்.

லக்னோ காங்கிரஸ் கூட்டத்தில் ஸ்ரீயோகி சுத்தானந்த பாரதி கூறிய அதே வார்த்தைகளை அப்படியே சாய்பாபா கூறியது, மூவருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

திலகர், பாபாவை ஆச்சரியத்தோடு பார்த்தார். பிறகு “அப்படியானால் சுயராஜ்ஜியம் எப்படி கிடைக்கும்?” என்று பாபாவைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு பாபா, “இந்த பணிக்காக ஒருவன் தேர்வு செய்யப்பட்டுள்ளான். நமது சுயராஜ்ஜியம் அவனால் கிடைக்கும், நீ போய் நிம்மதியாகத் தூங்கு” என்றார்.

பாலகங்காதர திலகர் மவுனமாக நின்றார். உடனே பாபா அங்கிருந்த கபர்டே என்பவரிடம் பகவத் கீதையின் 12-வது அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார்.

கபர்டே படித்து முடித்ததும், “இதுதான் வழி. ஆண்டவன் உதவி செய்வான். மவுனமாக இரு” என்று பாபா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “உன்னை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டு சோதனைகளைத் தாங்கிக் கொள். தியாகம் ஒரு போதும் வீணாவதில்லை. ஆண்டவன் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டு விடு. மவுனமாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிரு” என்றார்.

இதையடுத்து பாபாவிடம் அவர்கள் மூவரும் விடை பெற்று சீரடியில் இருந்து புறப்பட்டனர்.

பின்னர் சாய்பாபா குறித்து பாலகங்காதர திலகர் கூறுகையில், “உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பேசும் அனைவருக்கும் பாபா உரிய மகான் ஆவார்” என்றார்.

பாபா சொன்னது போல இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை ஏற்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து மகாத்மாகாந்தி இந்தியா திரும்பினார். 1920-ம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று நாடு முழுவதும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.

அதன் பிறகே சுதந்திரப் போராட்டத்தில் வேகம் ஏற்பட்டது. பாபா சொன்னது போல காந்தி முயற்சியினால் அடுத்த 27 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெற்றது. சாய்பாபாவின் முன் கூட்டியே அறியும் சக்தியை இந்த நிகழ்ச்சி உறுதிபடுத்துவதாக அமைந்தது.

பாபாவுக்கு எதிர்கால நிகழ்ச்சி மட்டுமல்ல, தமது எல்லாம் அறியும் திருஷ்டியினால், பக்தர்களின் கடந்த காலத்தையும் சொல்லும் வழக்கம் இருந்தது. சில பக்தர்களிடம் அவர்களது கடந்த காலத்தைப் பற்றி புட்டுப் புட்டு வைத்து விடுவார்.

அதன் அடிப்படையில், அவர் சில சமயங்களில் பக்தர்களின் துன்பங்களை தீர்த்துள்ளார். சில பக்தர்களின் துன்பங்களை குறைத்துள்ளார். அதற்கு ஒரு நிகழ்வை உதாரணமாக சொல்லலாம்.

புனாவைச் சேர்ந்தவர் அம்பதேகர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் உரிய வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்து விட்டு தற்கொலை செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்.

சீரடிக்கு சென்று 2 மாதங்கள் தங்கி இருந்தார். சீரடியில் சாவடி அருகில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டார்.

அந்த கிணறு நோக்கி அவர் நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த சகுணன் என்பவர் அங்கு வந்தார். அவர் அம்பதேகரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, “இது அல்கோட் மகாராஜின் வரலாறு புத்தகம். படித்துப் பாருங்கள்” என்று கொடுத்தார்.

சாகப் போகிறவனிடம் புத்தகத்தை கொடுத்துப் படிக்கச் சொல்கிறாரே… என்று நினைத்த அம்பதேகர், சரி படிப்போம் என்று ஒரு இடத்தில் அமர்ந்து புத்தகத்தின் ஒரு பக்கத்தைப் புரட்டினார்.

அந்த பக்கத்தில் என்ன இருந்தது தெரியுமா?

“உன்னை நீ அழித்துக் கொள்ளக் கூடாது. முந்தையப் பிறவிகளில் செய்த கர்மாக்களின் பலனை இந்தப் பிறவியில் தற்போது அனுபவித்து கழிக்கிறோம் என்ற உண்மையை உணர வேண்டும். எனவே இந்தப் பிறவியில் எவ்வளவு துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் சகித்துக் கொள்ள வேண்டும். முந்தைய பிறவிகளின் கர்மா பலன்களை ஒரேடியாக தீர்த்து விட்டால் நிம்மதி தானாக வந்து விடும். யாருடைய வாழ்க்கையும், எப்போதும் இருட்டாகவே இருப்பதில்லை. ஒரு நாள் நிச்சயம் விடிந்தே தீரும்”.

அல்கோட் மகராஜ் தனது சீடனுக்கு கூறிய அறிவுரைகளாக இவை அந்தப் பக்கத்தில் இடம் பெற்றிருந்தன. அதை படித்து முடித்ததும் அம்பதேகரின் உடல் சிலிர்த்தது.

தனக்காகவே அது எழுதப்பட்டு இருப்பது போல உணர்ந்தார். சற்று யோசித்த போதுதான், “இவையெல்லாம் பாபாவின் திருவிளையாடல்” என்று நம்பினார். தற்கொலை முடிவை கைவிட்டார். பிறகு துவாரகமாயி மசூதிக்கு ஓடினார். அவரைப் பார்த்ததும், பாபா புன்னகைத்தார்.

“என்ன தற்கொலை முடிவை மாற்றி விட்டாயா?” என்றார் பாபா. அடுத்த வினாடிபாபாவின் பாதக்க மலங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய அம்பதேகர், “பாபா… என்னை மன்னித்து விடுங்கள்” என்று கண்ணீர் விட்டு கதறினார்.

அவரை ஆசுவாசப்படுத்தி பாபா ஆசீர்வாதம் செய்தார். பிறகு, “உன் துன்பங்கள், துயரங்கள், கவலைகள் எல்லாம் இன்றோடு முடிந்து விட்டது. இன்றே உன் ஊருக்கு செல். புதிய தொழில் வரும். போய்… வா…” என்றார்.

இதைக் கேட்டதும் அம்பதேகர் மிகவும் உற்சாகம் அடைந்தார். புனாவுக்கு திரும்பி வந்ததும் ஜோதிடம் கற்றார். விரைவில் ஜோதிடராக மாறினார்.

நாளடைவில் அவர் புகழ் பரவியது. ஜோதிடக் கலையில் அவர் உச்சத்துக்குச் சென்றார். தனது புகழ் அனைத்துக்கும் காரணம் சாய்பாபா ஒருவரே என்று அவர் வாழ்நாள் முழுவதும் சொன்னார்.

இப்படி பல தடவை பக்தர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதை சாய்பாபா மிக சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் காட்டி அற்புதங்கள் செய்தார்.

தன்னை நம்பி சீரடி வந்த பக்தர்களை பாபா ஒரு போதும் கை விட்டதே இல்லை. பாபா மீது யார் நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் எந்தத் துன்பங்களையும், எந்த இடையூறுகளையும் தாண்டி வெற்றி பெறுவார்கள். அதை உறுதிப்படுத்தும் பாபாவின் அற்புதத்தை அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.