தூய்மையான, நேர்மைமிக்க, அரசியலுக்காக பெண்களின் அரசியல் பங்குபற்றுதலை அதிகரிப்பது எதிர்காலத்தில் முக்கியமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் மகளிர் முன்னணியின் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தூய்மையான அரசியல் வகிபாகங்கள் இன்று நாட்டுக்கு தேவையாக இருக்கின்றது. மக்களுக்காக தூய்மையானதும் நேர்மையானதுமான சேவையை ஆற்றும் பலம் எமது தாய்மாருக்கும் மகள்மாருக்கும் இருக்கிறது.
அப்பலத்தை இனங்கண்டு எதிர்கால தேர்தல்களில் மகளிர் பிரதிநிதித்துவத்துக்கான பின்னணியை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
அத்துடன் ஊழல், மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டு அரச வளங்களை தவறாக பயன்படுத்துவோரன்றி, வெற்று கோஷங்கள் இல்லாத நேர்மையான, தூய்மையான அரசியல் இயக்கத்தையே இன்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்களது அந்த அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, அமைச்ர்களான சுசில் பிரேம ஜயந்த, நிமல் ஸ்ரீபால டி சில்வா, ராஜாங்க அமைச்சர்களான சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே, சுமேதா ஜி ஜயசேன ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.