கிளிநொச்சியில் புலிகளால் எந்தக் கொலையும் இடம்பெறவில்லை : சட்டம் ஒழுங்கு அமைச்சர்

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களது விபரங்களை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அன்றைய காலத்தில் குறிப்பாக 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டமானது அரச நிர்வாகத்துக்கு உட்பட்டிருக்கவில்லை.

மேலும், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரே அங்கு பொலிஸ் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது. இப்படி இருக்கும் போது 1983 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் 2009 ஆம் காலப்பகுதியில் இருந்து தற்போது வரையில் இவர்களால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அக்கால பகுதியில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுமக்கள் படுகொலை சம்பவங்கள் தொடர்பில் பத்ம உதயசாந்த குணசேகர மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கும் போது, 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 190 பேர் மாத்திரமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறியமை குறிப்பிடத்தக்கது