தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலா கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் நாளை வவுனியா விடுதி ஒன்றில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று நாளை வவுனியா விடுதி ஒன்றில் கட்சியின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நாட்டின் அரசியல் சூழ்நிலையில், கூட்டமைப்பினரிடையே தெளிவான ஓர் முடிவுகள் இல்லை என்றும், அவர்களுக்கிடையில் குழப்பமான கருத்து முரண்பாடுகள் இருப்பதாக அண்மைய நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் நாளைய தினம் கூட்டமைப்பினரிடையேயான கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படும் விவகாரத்தில் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் எழுந்திருந்ததுடன், நேரடியாகவே இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரான சுரேஸ்பிரேமச்சந்திரன் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில், இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்றும், கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
ஆனால், இந்தக் கடிதத்தில் மூவர் தாம் கையெழுத்திடவில்லை என்று கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கு ஏன் கால அவகாசம் வழங்க கூடாது என புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே ஒற்றுமையில்லை என்ற கருத்தை மேலும் வலுப்பெறச் செய்வதாக இருப்பதாகவும் வெளியான கருத்தை அடுத்து, கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என கட்சியின் தலைவர் சம்பந்தன் கேட்டுக்கொண்டதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன்.
இதனையடுத்தே நாளை தினம் வவுனியாவில் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில நடந்துவரும் கூட்டத் தொடர் குறித்தும், ஐ.நா விவகாரம் குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.