இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது என எடுத்துள்ள முடிவானது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை, நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை உடந்தையாக உள்ளது என்பதே எமது குற்றச்சாட்டு என தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளரும், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான குமாரவேல் குருபரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கக்கூடாது எனக் கோருவது சர்வதேச அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் செயல் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கருத்துக்களை முனைவைத்துள்ள நிலையில் வடகிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கக் கூடாது ஐ. நா மனித உரிமைகள் பேரவைக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என ஊடகவியாலாளரொருவர் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தோல்வி தான் 2006ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உருவாக்குவதற்கான காரணமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகள் விடயங்களில் திறனாக செயற்படவில்லை. ஆகவேதான் மனித உரிமைகள் விடயத்தில் வினைத் திறனாக செயற்பட வேண்டும் என்ற நோக்கிலேயே ஐ. நா மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நாங்கள் மனித உரிமைகள் பேரவையில் பங்கெடுக்க மாட்டோம் என இலங்கை கூறினாலும் தற்போது பங்கெடுத்து விட்டு ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனக் கூறுகிறார்கள்.
இவ்வாறான நிலையில் தற்போது பேரவை இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது என எடுத்துள்ள முடிவானது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை, நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை உடந்தையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
சர்வதேச யதார்த்தம் எங்களுக்கு முழுமையாக விளங்கியிருக்கிறது என்பதற்கப்பால் இலங்கை தொடர்பான யதார்த்தம் எங்களுக்கு நன்றாக விளங்கியிருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான கலந்தாய்வு செயலணி ஒரு சில நீதிபதிகளைக் கொண்ட கலப்புபொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
அந்த அறிக்கையைக் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாங்க மறுத்து வந்தார்கள். தொடர்ந்து குறித்த அறிக்கையைக் கையளிப்பதற்காக பல தடவைகள் சந்தர்ப்பம் கேட்டபோதும் அரசாங்கம் அதனைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.
இந்த நிலையில் இறுதியாக அந்த அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.
சிறுபான்மையாக வெளிநாட்டு நீதிபதிகளிருந்தால் பெரும்பான்மையாக இலங்கை நீதிபதிகள் காணப்பட்டால் அந்தச் செயன்முறை நீதிக்கு வழி கோலாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. இருந்தாலும் அந்த குறைந்தபட்சக் கோரிக்கையைக் கூட ஏற்க இலங்கை அரசாங்கம் தயாராகவில்லை.
அண்மையில் தேசிய சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சியில் இலங்கையின் பிரதம நீதியரசர், நீதிபதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்து கொண்ட மேடையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலப்புப் பொறிமுறையொன்றை இலங்கையில் உருவாக்குவதற்கு அரசியல் ரீதியில் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதற்கான சாத்தியப்பாடு காணப்பட்டது எனக் கருத்தினாரா? மங்கள சமரவீர ஜெனிவாவிற்குச் சென்று பசப்பு வார்த்தைகளுடன் கூடிய சர்வதேசம் விரும்புகின்ற அழகிய தாராண்மை வாத மொழியில் பேசி விட்டு வந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
அது மாத்திரமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெறுமனே கலப்புப் பொறிமுறை இருந்தால் மாத்திரமல்லாமல் உள்ளகப் பொறிமுறை இருந்தால் கூட படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பாத்திரம் கூடத் தாக்கல் செய்ய விடமாட்டேன் என மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
ஆகவே, இலங்கையில் உள்ளகப் பொறிமுறை இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதை இதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியாதாகவுள்ளது.
உள்ளக ரீதியாகவோ, கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கை மீதான விசாரணை நடாத்துவதற்குச் சாத்தியமில்லாவிடில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான விடயங்களைப் பாரப்படுத்துவதன் ஊடாகவே தான் நீதி கிடைக்கும் என்றால் தமிழ் அமைப்புக்கள் என்கிற ரீதியில் எங்களுடைய கடமை என்ன? எனச் சிந்திக்க வேண்டும்.
கலப்புப் பொறிமுறை தொடர்பாக ஐ. நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கேட்ட போது அதற்கு இலங்கை அராசாங்கம் சம்மதிக்காத நிலையில் ஐ. நா மனித உரிமைகள் பேரவை தங்களின் நம்பகத் தன்மையை நிரூபிப்பதற்கு நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தெளிவாக மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான முழுப் பொறுப்பும் உங்களிடமே உள்ளது. நீங்கள் தான் கலப்புப் பொறிமுறைக்கு இலங்கைக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டிருந்தீர்கள். ஆனால், இன்று அதற்கான வாய்ப்பு இல்லை என்பது முடிவாகி விட்டது எனும் நிலையிலேயே நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறோம்.
அவ்வாறு இல்லாவிடில் யாரும் இணை அனுசரணையாளராக வரலாம். ஏமாற்றி விட்டுச் செல்லலாம் எனும் நிலை தொடரக் கூடாது. மியன்மார் இலங்கையின் முன்னுதாரணத்தை இன்று பின்பற்றுகிறது .
ஆகவே , இலங்கையின் முன்னுதாரணம் என்பது சர்வதேச ரீதியாக மனித உரிமைகளால் பாதிக்கக் கூடிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் இடிவிழுந்த செய்தியாகவே உள்ளது.
தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாகவிருக்கிறோம். அதற்கான சாத்திய எல்லைகள் சர்வதேசத்தில் எதுவாகவிருப்பினும் அதனைக் கோருவதற்கான பொறுப்பு எங்களிடமுள்ளது.
தமிழ்மக்களின் அமைப்புக்கள் என்ற வகையில் எங்களுடைய மக்களின் நலன்களை மையமாக வைத்துக் கோரும் எந்தவொரு அமைப்பும் இதனையே கோரும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வணபிதா இரவிச் சந்திரன், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சிவகாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.