கடல் கொலைகள்! இப்படியே தொடர்வது நல்லதல்ல!

இராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் கொந்தளிப்பு அடங்கிய பாடில்லை.

கடந்த திங்கட்கிழமை இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 வயது மீனவர் பிரிட்ஜோவின் உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்து, இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இலங்கை கடற்படை இந்த துப்பாக்கிச் சூட்டிற்குத் தாங்கள் காரணமில்லை என்று மறுத்திருக்கிறது.

இலங்கை அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இப்படி துப்பாக்கி சூடு நடத்தப்படுவது புதிது ஒன்றும் அல்ல என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுடப்படவில்லை என்றால், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவரை வேறு யார் சுட்டிருக்க முடியும் என்கிற கேள்விக்கு, விசாரணை பதிலாக இருக்க முடியாது.

இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையேயான மோதல்கள் கடந்த ஒரு வாரமாகவே அதிகரித்து வந்திருக்கிறது.

மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரையில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் மீனவர்களின் எண்ணிக்கை 35ல் இருந்து 53ஆக உயர்ந்திருக்கிறது.

அதில் 18 பேர் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடுக்கடலில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்தார்கள் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

ஐந்து மாதத்திற்கு முன்னால் டெல்லியில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்கின் முன்னிலையில், இலங்கை – இந்திய வெளியுறவுத் துறை, வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கூட்டுப் பணிக்குழு ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் குழு, கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்பது தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்தக் குழு கூடி விவாதித்து பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் ஒன்று, இரண்டு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு, தாக்குதல் உள்ளிட்ட எந்தவித வன்முறையிலும் ஈடுபடக்கூடாது என்பதும், அப்பாவி மீனவர்கள் தாக்கப்படக் கூடாது என்பதும்.

கடந்த திங்களன்று இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் இளைஞர் பிரிட்ஜோ கொல்லப்பட்டதும், கடந்த வாரங்களில் பல இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் இலங்கை அரசு டெல்லியில் ஒப்புக்கொண்ட சமரசத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இந்திய மீனவர்கள் தங்களது கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள் என்பதுதான் இலங்கையின் குற்றச்சாட்டு.

பாக் ஜலசந்தி என்பது இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக இருக்கும்போது, நடுக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தவறுதலாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவது என்பது தவிர்க்க இயலாதது.

நடுக்கடலில் எல்லைகள் அடையாளப்படுத்தப் படுவதில்லை என்பது தெரிந்தும், இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு மீண்டும் மீண்டும் கூறுவதில் அர்த்தமில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தை அடுத்த ஒரு தீவைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களையும் அவர்களது இரண்டு படகுகளையும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் நாகப்பட்டினத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்படுகிறார்களே தவிர, சுட்டுக் கொல்லப்படுவதில்லை.

நாம் காட்டுகிற நாகரிகத்தை இலங்கை கடற்படையினர் காட்டுவதில்லை என்பதுதான் பிரச்சினை.

1980ல் இருந்து இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்ந்ததால், மீன்பிடித் தொழில் முற்றிலுமாகத் தகர்ந்தது. அப்போது பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் தங்கு தடையில்லாமல் மீன்பிடித்து வந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் இராமேஸ்வரத்தில் “ட்ரோலர்கள்’ என்று அழைக்கப்படும் இழுவை வலைப் படகுகள் கணிசமாக அதிகரித்தன. இதன்மூலம் அதிக அளவிலான மீன்களைப் பிடிக்க முடியும்.

இலங்கையில் அமைதி ஏற்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மீனவர்கள் முழுவீச்சில் மீன்பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களிடம் இந்திய மீனவர்களிடம் இருக்கும் அளவுக்கு இழுவை வலைப் படகுகள் இல்லை.

நமது மீனவர்கள் பாக் ஜலசந்தியில் உள்ள எல்லா மீன்களையும் அள்ளிச் சென்று விடுகிறார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு.

இலங்கை கடற்படையினர் அவர்களுக்குத் துணையாக இருந்து இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையாமல் தடுக்கிறார்கள்.

இப்போது பாக் ஜலசந்தியில் அளவுக்கதிகமான மீன்பிடிப் படகுகள். அதனால் இரண்டு தரப்பினருக்கும் போதுமான அளவு மீன்கள் கிடைப்பதில்லை.

பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவே கூடாது என்று பிடிவாதம் காட்டுகிறார்கள் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள்.

இந்திய – இலங்கை அரசின் கூட்டுக் குழு உடனடியாக எடுக்க வேண்டிய முடிவு, எத்தனை நாட்களுக்கு இந்திய மீனவர்கள் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கலாம் என்பதை நிர்ணயிப்பது.

அதேபோல, எந்தக் காரணத்துக்காகவும் துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்கிற உத்தரவாதத்தையும் இலங்கையிடமிருந்து இந்தியா பெறுவது.

இவை இரண்டும் நடைபெறாவிட்டால், பிரிட்ஜோ போன்ற மீனவ இளைஞர்கள் பலியாவது தொடரத்தான் செய்யும்.

இந்தப் பிரச்சினை இப்படியே தொடர்வது நல்லதல்ல.