பில்லி, சூனியக் கலையில் ‘சிறப்பு பட்டம்’: தென்னாப்பிரிக்காவில் புதிய பள்ளி திறப்பு

டர்பன் குவாஸுலு நாட்டால் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியை தென்னாப்பிரிக்காவின் உயர் கல்வித்துறை மந்திரி பிளேட் ட்சிமான்டே கடந்த திங்கட்கிழமை திறந்து வைத்தார்.

பொதுவாக, பழமைவாதத்தில் ஊறிகிடக்கும் தென்னாப்பிரிக்காவில் சூனியம் உள்ளிட்ட மாந்தரிக வேலைகளின் மூலம் ஒருவரின் வாழ்க்கையை பாழடிப்பதுடன் அவரை ரகசியமாக கொன்றுவிட முடியும் என இங்குள்ள பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.

இப்படி சூனியக்கலை கற்றவர்களுக்கு இங்கு நல்ல மதிப்பும் மரியாதையும் வருமானமும் கிடைப்பதால் பலர் இதை முழுநேர தொழிலாக நடத்தி வருகின்றனர். டாக்டர்கள், என்ஜினீயர்களுக்கு இணையாக இந்த தொழிலிலும் பல போலிகள் ஊடுருவி இருப்பதால் அரசிடம் முறையாக அனுமதி பெற்று இந்த தொழிலை தொடங்க வேண்டும் என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

இந்நிலையில், பில்லி, செய்வினை, மாந்தரிகம், பேய் ஓட்டுதல் மற்றும் சூனியக் கலையில் ‘சிறப்பு பட்டம்’ அளிப்பதற்காக டர்பன் குவாஸுலு நாட்டால் பகுதியில் புதிய பள்ளி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நாடு முழுவதும் இதுபோல் மேலும் பல பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த பள்ளியில் படித்து பட்டம்பெற குறைந்தபட்ச தகுதியாக 12-வது வரை படித்திருக்க வேண்டும். அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.