திருமண மோதிரத்தை பிரிட்டன் ராணி சுழற்றினால் என்ன நடக்கும்?: வெளிவராத புதிய தகவல்

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய கலாச்சார விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் ராணி எலிசபத்தை சந்தித்து உரையாடியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

உலகத்தின் மிகப்பெரிய வி.ஐ.பி.யாக கருதப்படும் ராணி எலிசபத்துக்கு தற்போது 90 வயதாகிறது. பிரிட்டிஷ் அரச வம்சத்தின் மிக மூத்த வயதுடைய பட்டத்து ராணியாக இருக்கும் இவரை சந்திப்பதற்கு அவ்வளவு எளிதில் அனுமதி கிடைத்து விடுவதில்லை.

அப்படியே அனுமதி கிடைத்தாலும் பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய முழநீள பட்டியல் சந்திக்க விரும்ப நினைக்கும் நபருக்கு எச்சரிக்கை மணியாக (ஒலிக்கப்படும்) அளிக்கப்படும். சில நிறங்களில் உடையணிவதை தவிர்க்க வேண்டும். சில நறுமணங்கள் கொண்ட பொருட்களை சந்திப்பின்போது பயன்படுத்த கூடாது என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரத்தில் மட்டுமல்ல, இதற்கு முன்னர் ராணி எலிசபத் சென்னை வந்திருந்தபோது தரமணியில் உள்ள திரைப்பட நகரில் நடைபெற்ற ‘மருதநாயகம்’ படப்பிடிப்பின்போதும் ராணியும் கமலஹாசனும் ஏற்கனவே சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ராணியின் அங்க அசைவுகள், சில நுணுக்கமான செய்கைகளின் (ஜாடை) மூலம் அவரது மனநிலை தொடர்பான சில ரகசியங்களும் மறைந்துள்ளன என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இதுதொடர்பாக, அவரது அரண்மனை வட்டாரங்களுக்கு மட்டுமே சில விபரங்கள் தெரியும். அவற்றில் ஒன்றிரண்டு தற்போது வெளியாகியுள்ளது.

ராணியிடம் கார் ஓட்டுனர் உரிமம் கிடையாது. அவர் எந்த நாட்டுக்கும் செல்ல பாஸ்போர்ட் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் எந்த அளவுக்கான கண்ணியமும் மரியாதையும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது அரண்மனையில் உள்ள அனைவருக்கும் அத்துப்படி. அரண்மனையில் வரலாற்று பதிவாளராக முன்னர் பணியாற்றிய ஹியூகோ விக்கர்ஸ் என்பவர் ராணியின் ஒருசில சங்கேத குறிப்புகளை பற்றி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தனது கைப்பையை மேஜை மீது வைத்தால் ராணி வெளியே புறப்பட தயாராகி விட்டார் என்று புரிந்து கொள்ளலாம். அதற்கேற்ப அவரது காரியதரிசிகளும் மெய்காப்பாளர்களும் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் புறப்பட தயாராகி விட வேண்டும்.

இடது கையில் இருக்கும் பையை வலது கைக்கும், வலது கையில் இருக்கும் பையை இடது கைக்கும் மாற்றுகிறார் என்றால் இந்த பேச்சை இத்தோடு நிறுத்திக்கொள் என்று பொருள். பேசியபடியே விரலில் அணிந்திருக்கும் திருமண மோதிரத்தை திருகுகிறார் என்றால் ‘முதலில் இந்த அறுவையை இங்கிருந்து வெளியேற்றுங்கள்’ என்று மெய்க்காப்பாளர்களுக்கு உத்தரவிடுகிறார் என்று அர்த்தம்.

உடனடியாக, நமது தேவாலயத்தின் தலைமை மதகுரு (பிஷப்) உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று அந்த நபருக்கு ‘அல்வா’ கொடுத்து மெய்க்காப்பாளர்கள் வெளியே அழைத்து சென்று விடுவார்களாம். இதுபோன்ற மேலும் சில அரிய தகவல்களை அந்த பத்திரிகையில் ஹியூகோ விக்கர்ஸ் பதிவு செய்துள்ளார்.