பாகிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் போலீஸ் மற்றும் உளவு அமைப்புகளிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி ஐ.எஸ். தீவிரவாதிகள் டெலிகிராம் எனும் குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. வழக்கமான மொபைல் போன் பயன்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்கு சாதகமான, ரகசிய தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடிவதாக கூறப்படுகிறது. இந்த வழிமுறை வெற்றிகரமானதாக இருப்பது தெரியவந்துள்ளது என பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் செயலி தீவீரவாதிகளுக்கு அதிக பயன் தரும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் குறுந்தகவல்கள் தானாக அழிந்து விடும் என்பதே ஆகும். ஒருமுறை வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதும், இந்த தகவல் எவ்வித தடையமும் இன்றி தானாக அழிந்து விடும்.
நேரடியாக தகவல்களை பரிமாற்றி கொள்வதை அடுத்து மிகவும் வெற்றிகரமான தகவல் பரிமாற்ற முறையை இந்த செயலி வழங்கி இருப்பதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செயலியை இடைமறிக்கும் தொழில்நுட்பம் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் இல்லாதது போலீசாருக்கு பின்னடைவாக உள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில் பல்வேறு தாக்குதல்கள் பாகிஸ்தானிலும் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.