ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்பதை இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்று குழப்பமான பெயரில் பேரவையைத் தொடங்கிய ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று ஆர்.கே நகரில் போட்டியிடுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் தேர்தல் பணியை உற்சாகத்துடன் உடனடியாக தொடங்கியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட திலகர் நகர், சிவகாமி நகர், சுனாமி குடியிருப்பு உள்பட இடங்களில் ஜெ.தீபாவுக்கு ஆதரவாக பேரவை கொடியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெ.தீபா நிற்கும் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக் கூறியும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் தேர்தல் அலுவலகங்களை திறப்பதற்கான ஏற்பாடுகளையும் அவருடைய ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் திகதி அன்றே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மறுநாளே தொகுதியில் பிரச்சாரம் தொடங்கியுள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்று இன்னும் ஓரிரு நாட்களில் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.