தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன்.
இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.
ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடுகிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதாமாதம் சிரவணம் என்ற விழா பிரசித்தம். சிறப்பு என்னன்னா ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ'( என்னை சரணைந்தால் உன்னை நான் காப்பேன்). என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் பகல் 11 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்யலாம். இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குருவாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.
உப்பிலியப்பனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத உணவையே பிரசாதமாக உண்டு வந்தோம்.பூமி நாச்சியார் பகவானுக்கு சமைக்கும்போது உப்புப் போட மறந்துவிட்டதால் பெருமாள் உப்பில்லாமலே படைப்பதாக ஐதீகம்.
உப்பிலியப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பெருமாளுக்கு நெய் தீபம் பிரகாரமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் ( உப்பு தவிர ) இங்கு காணிக்கை செலுத்தலாம்.
கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திலும், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது.