ஜெ. நினைவிட தியானத்துக்கு எடப்பாடியை திட்டம்போட்டு தள்ளிவிடும் தினகரன்!

திருநின்றவூரில் அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் சிலைகளை திறந்து வைத்தார். இந்த விழாவிற்கான அதிமுகவினர் பெரிய பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அமைத்து அனைவரையும் வரவேற்றனர்.

ஆனால், நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் வைக்கப்பட்ட பேனர்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

எடப்பாடி பெயரில்லை..
போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் அப்படியே புகைப்படம் இடம் பெற்றாலும் சிறிய அளவிலேயே இடம் பெற்றன. புகைப்படம் இருக்கும் போஸ்டர்களில் பழனிசாமியின் பெயர் இடம் பெறவே இல்லை.

10 அடிக்கு ஒரு போலீஸ்
இந்த சிலை திறப்பு விழாவிற்கு ஆவடியில் இருந்து திருநின்றவூர் வரை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு 10 அடிக்கு ஒரு போலீஸ் என்ற அளவில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். டிடிவி தினகரனுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என அந்தப் பகுதிவாசிகள் பேசிக் கொண்டனர்.

சிறைத் தலைவர் ‘சின்னம்மா’

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை திறந்து வைத்து பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவிற்கு பின்னர், கட்சியை நடத்தும் ஒரே தலைவர் சின்னம்மாதான். ஆனால் அந்த தியாகத் தலைவி பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவரை உங்கள் ஆதரவுடன் வெளியே கொண்டு வருவோம்” என்று கூறினார்.

ஜெ. காரில் வந்த தினகரன்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த டிடிவி தினகரன், ஜெயலலிதா பயன்படுத்திய காரில் வந்து இறங்கினார். இதைப் பார்த்த கட்சிக்காரர்களே ஷாக் ஆயிட்டாங்களாம்.

தொடர் அவமானம்
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டிடிவி தினகரன் அவமானப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவிலும் அவரை டம்மி செய்வதே நிகழ்ச்சி நடைபெற்றது.

விரைவில் தியானமா…
ஏற்கனவே, இதே போன்று ஓபிஎஸ்ஸை ஒரு முதல்வர் என்றும் பாராமல் சசிகலா தரப்பினர் அவமானப்படுத்தினார்கள். அதனால்தான் தான் மெரினாவில் தியானத்தில் அமர்ந்ததாக ஓபிஎஸ் கூறினார். அதற்கு பின்னர் பல உண்மைகளை சசிகலா பற்றி ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதே போன்று எடப்பாடியும் தியானத்தில் அமர்ந்து உண்மையை சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை.