சென்னை அருகே திருநின்றவூரில் எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலைகளை திறக்க சென்ற அதிமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரனுக்கு எதிராக அக்கட்சியினரே கறுப்பு கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலா சிறைக்குப் போன நிலையில அதிமுகவின் துணைப் பொதுச்செயலரானவர் தினகரன். தற்போது அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
சசிகலாவையே ஏற்க மறுக்கும் அதிமுக தொண்டர்கள் தினகரனின் நாடகங்களால் கடும் அதிருப்தி அடைந்து போயுள்ளனர். தினகரனும் தமது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அதிமுக தலைமை அலுவலகம் போவது, செய்தியாளர்களை சந்திப்பது, மைக் பிடிப்பது என சகல வித்தைகளையும் செய்து வருகிறார்.
சென்னை அருகே திருநின்றவூரில் நேற்று எம்ஜிஆர்-ஜெயலலிதா சிலைகளைத் திறந்து வைக்க தினகரன் சென்றார். அப்போது தினகரனே திரும்பி போ! தினகரனே திரும்பி போ! என்ற முழக்கங்களுடன் கறுப்புக் கொடி ஏந்தி அதிமுகவினர் முழக்கங்களை எழுப்ப பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் தினகரன் கடும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கறுப்பு கொடி காட்டியவர்களை போலீசார் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.