பிறகென்ன, சட்டுப்புட்டென்று ராமர் கோவிலை கட்ட வேண்டியதுதானே.. கிளம்பியது சிவசேனா!

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில், பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தில் மிகப்பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது பாஜக. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத், உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜகவுக்கும், இந்த வெற்றிக்கு உழைத்த பிரதமர் மோடிக்குக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ், சமாஜ் வாடி கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன.

இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணியான அகாலிதளம், பாஜக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இது மக்கள் மாற்றத்தை விரும்புவதை காட்டுகிறது என்றார். மேலும், பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்ட முயற்சி மேற்கொள்ளும் எனவும் சஞ்சய் ராவுத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.