ஹம்பாந்தோடை துறைமுகத்தால் பிராந்திய வலயத்தில் ஏற்படப் போகும் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து இலங்கையிடம் இந்தியா தீவிர கரிசனையையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவால் இராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்ற அடிப்படையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் கொண்டுவருவது மற்றும் போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் வருவது முதலான செயற்பாடுகளை தவிர்க்கும் வகையில் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றும் செ;தி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமையை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடன்பாடு ஒன்று இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் கையெழுத்திடப்படவுள்ளது.
இதற்கான இறுதி உடன்படிக்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. 75 பக்கங்களைக் கொண்ட இந்த உடன்படிக்கை வரைவில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை தடுப்பதற்கான தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின், பிராந்திய எல்லைக்குட்பட்ட தரையிலோ கடலிலோ, தரை, கடல், வான் என எங்கேனும், இராணுவம் சார்ந்த எந்த செயற்பாடுகளும் இருக்க முடியாது.
‘போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், தரித்தல், எந்த இராணுவ தளபாடங்களை, இயந்திரங்களை களஞ்சியப்படுத்தல், தொலைத்தொடர்பு வலையமைப்பு மற்றும் வசதிகளை
நிறுவுதல், எந்த வகையிலான இராணுவம், துணை ஆயுதப்படைகள் கொண்டு வருதல் மற்றும் நிறுத்துதல் என்பன, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி, இலங்கை அரசாங்கத்துக்கே இத்தகைய செயற்பாடுகளின் மீது முழுமையான அதிகாரம் உள்ளது.’ என்று அந்த வரையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை கடற்படை, பொலிஸ், துறைமுக அதிகாரசபை மற்றும் மூலோபாய அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சின் செயலாளர் ஆகிய தரப்பினரைக் கொண்ட மேற்பார்வைக் குழுவொன்றே, துறைமுகச் சொத்துக்கள் தொடர்பான பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும் கூட்டு முயற்சி நிறுவனம், உள்ளக பாதுகாப்பு, சரக்குகள், கப்பல்கள் மற்றும் ஆட்களின் பாதுகாப்பு, உட்செல்லும், வெளிச்செல்லும் வாயில்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருக்கும். இது மேற்பார்வைக் குழுவின் கண்காணிப்பிலும், நெருக்கமான ஒருங்கிணைப்பிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நேரடிப் போட்டியை ஏற்படுத்தக் கூடிய வகையில், 100 கி.மீ சுற்றுவட்டத்துக்குள், எந்தவொரு கொள்கலன் துறைமுகத்தையோ, முனையத்தையோ அடுத்த 15 ஆண்டுகளுக்கு அபிவிருத்தி செய்யக் கூடாது என்ற நிபந்தனைக்கும் இந்த வரைவு இணங்குகிறது.
எனினும், மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கோ, காலி, ஒலுவில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கோ இதனால் எந்த தடையும் விதிக்க முடியாது என்றும் அந்த வரைவு உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது.