சொகுசு வாகனங்களுக்கு ஒதுக்கும் நிதியை பட்டதாரிகளுக்கு வழங்கு : அ. பிரபாகரன்

அரசியல்வாதிகளின் சொகுசு வாகனங்களுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கமுடியுமாயின் ஏன் படித்த இந்த பட்டதாரிகளுக்கு அதனை வழங்கமுடியாது? என ஜனநாயக பேராளிகளின் கட்சித்தலைவர் அ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பார்வையிட்டு அதன்பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்கணக்கில் சத்தியாக்கிரகம் இருக்கும் பட்டதாரிகள் மனம் விரக்தியடைந்து தவறான விபரீதமான முடிவுகளை எடுக்கும் முன்னர் அரசாங்கம் உரியதீர்வை உடனடியாக வழங்கவேண்டும்.

பட்டதாரிகளின் இந்தப்போராட்டத்திற்கு எமது கட்சி ஆதரவு வழங்குகிறது. இதுவரை அரசாங்கமோ அரசியல்வாதிகளோ இவர்களின் பிரச்சினையை கண்டுகொள்ளாமலிருப்பது வேதனைக்குரியது.

எமது மாகாணசபைக்கு முட்டுக்கொடுத்து நிற்கும் மக்கள் பிரதிநிதிகள் கனவான்கள் ஏன் இப்பட்டதாரிகளின் பிரச்சினைகளைக் கேட்கவில்லை.

பயந்துபோய் ஒழிக்கின்றனர். ஏனிந்த தயக்கம்? கேட்டால் தமக்கான சொகுசுவாகனம் அடிபட்டுப்போகுமே என்ற எண்ணம்.

பேராட்டத்தைத் தொடரவிட்டு தமிழ்மக்களின் வாழ்க்கையை சீரழிப்பதே அவர்களின் நோக்கம். தமிழன் இன்று வீதிக்குவந்துவிட்டான். பட்டதாரிகள் நடுவீதியல். இதுதான் நல்லாட்சியா?

உடனடியாக பட்டதாரிகளுக்கு உரிய தொழில் வழங்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை போராட்டம் தொடர்பில் பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

நாம் கடந்த 14 நாட்களாக இந்த வீதியில் குழந்தைகளுடன் சத்தியாக்கிரகப்போராட்டத்தை நடாத்திவருகின்றோம். இன்னும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

அதற்காக போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நிதிஇல்லை என்கிறார்கள். அப்படியானால் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் வாகனங்களுக்கு ஒதுக்கும் கோடிக்கணக்கான நிதியை எமக்கு ஒதுக்கலாம்தானே.

நல்லாட்சியை நம்புகின்றோம். ஆனால் போராட்டம் தொடர்வதென்ன? இருந்தும் நம்பிக்கையுடனிருக்கின்றோம்.

அரச பல்கலைக்கழகங்களில் 5 வருடங்கள் படித்து பட்டம்பெற்று மேலும் 5வருடங்கள் தொழிலுக்காக காத்திருந்து விரக்தியின் விளிம்பில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

பட்டதாரிகளுக்கு தொழில் இல்லாத நாடு இலங்கைதான். அந்தந்த வருடத்தில் பட்டதாரிகள் வெளியேறும்போது அரசாங்கம் தொழிலை வழங்கியிருந்தால் இந்ததேக்கநிலை உருவாகியிருக்காது.

எமக்கு பரீட்சைவேண்டாம். சிரேஸ்ட்டத்துவ அடிப்படையில் தொழிலை வழங்குங்கள். என மேலும் தெரிவித்தனர்.