டிரம்ப்பை கொல்ல சதியா?: மர்மப் பையுடன் வெள்ளை மாளிகையின் சுவரை கடந்து உள்ளே நுழைந்தவர் கைது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (உள்ளூர் நேரப்படி) கடந்த வெள்ளிக்கிழமை இரவு (இந்திய நேரப்படி நேற்று) வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். சரியாக 11.38 மணியளவில் வெள்ளை மாளிகை வளாகத்தின் தெற்கு பகுதியில் உள்ள மதில் சுவரை தாண்டி குதித்த ஒரு மர்ம உருவம் முன்னேறி செல்வதை தொலைநோக்கி வழியாக கண்டு, பதற்றம் அடைந்த அதிபரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளும், தேசிய உளவுப்படையினரும் விரைந்து சென்று அந்நபரை உடனடியாக கைது செய்தனர்.

பிடிபட்டவரின் முதுகில் ஒரு ‘பேக் பேக்’ (back pack) இருந்ததாகவும், ஜோனாத்தன் என்ற அந்த 26 வயது வாலிபர் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஜாமினில் விடுவிக்க முடியாத காவலில் அடைத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அந்த வாலிபரின் நோக்கம் என்ன? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவருக்கு அதிகபட்சமாக பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு நிறைந்த வெள்ளை மாளிகையின் மதில் சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்த அந்த வாலிபரை கைது செய்த உளவுப்படை அதிகாரிகளை அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.