இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது போட்டி 16-ந்தேதி (வியாழக்கிழமை) ராஞ்சியில் தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டேவிட் வார்னருக்கு கடும் சவாலாக இருந்து வருகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 இன்னிங்சில் 9 முறை வார்னரை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் மட்டும் நான்கு இன்னிங்சில் 3 முறை அவுட்டாக்கியுள்ளார். வார்னர் களத்தில் நின்றாலே ஒரு முனையில் அஸ்வின் பந்து வீச அழைக்கப்படுகிறார். இது அவருக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது.
அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க புது திட்டத்தை வகுத்துள்ளதாக வார்னர் கூறியுள்ளார். இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘வலைப் பயிற்சியில் நான் சில விஷயம் குறித்து கடினமாக பயிற்சி எடுத்துக் கொண்டிக்கிறேன்.
இந்த தொடர் முழுவதும் நான் களம் இறங்கும்போது ஒரு முனையில் அஸ்வின் பந்து வீச அழைக்கப்படுகிறார். மறுமுனையில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அல்லது வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசுகிறார்கள். இதனால் என்னால் சிறப்பாக விளையாட முடியாமல் போகிறது.
பெங்களூரு டெஸ்டில் நான் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட நினைத்தேன். பலவிதமான வகையில் பவுன்சர் இருந்ததால் எனக்கு கவலை அளித்தது. அந்த பந்துகளை சமாளிப்பது சவாலான விஷயம்.
ரிவர்ஸ் ஸ்விப்பில் பந்தை மிஸ்சிங் செய்தால் எல்.பி.டபிள்யூ ஆக வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஷாட்டை விளையாட வேண்டுமென்றால் சில மாற்றங்களை செய்ய வேண்டும். சில ஷாட்டுகள் குறித்து முயற்சி செய்தால், எப்படி ரன்கள் குவிக்க போகிறேன் என்ற நினைப்பு என் மனதில் ஒடிக்கொண்டிருக்கும் என்பதை நான் அறிவேன்.
அஸ்வினுக்கு எல்லா சிறப்புகளும் சேரும். அவர் ஒரு சிறந்த வீரர். தனது சொந்த மண்ணில் விக்கெட்டுக்களை அள்ளியுள்ளார். அவருக்கு நான் மரியாதை கொடுக்கிறேன்’’ என்றார்.