தங்கள் தொகுதிக்குள் அதிமுகவின் சசி கோஷ்டி நுழைந்தாலே விரட்டியடிப்போம் என்றும் தாங்கள் ஓபிஎஸ் அணிக்கே வாக்களிப்போம் என்றும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த ஆர்கே.நகர் தொகுதி காலியானது.
ஒரு தொகுதியின் சட்டசபை உறுப்பினர் மறைந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ அடுத்த 6 மாதத்துக்குள் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பது சட்டம். இதனடிப்படையில் ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அத்தொகுதி மக்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக இணையதளம் ஆர்கே நகர் தொகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்தது. இதில் பெரும்பாலானோர் ஜெயலலிதாவால் கை காட்டப்பட்ட ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கே வாக்களிப்போம் எனக் கூறியுள்ளனர்.
ஓபிஎஸ் அணியினர் யாரை நிற்க வைத்தாலும் அவருக்கே வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். பலர் ஓபிஎஸ் அன்பானவர், பணிவானர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர் என கூறியுள்ளார்.
தீபா அரசியலுக்கு புதுசு
சிலர் தீபாவுக்கே ஆதரவு என்றும் அவர்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் கூறியுள்ளனர். பலர் தீபா அரசியலுக்கு புதிது அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை எனவே ஓபிஎஸ்க்குதான் எங்கள் ஓட்டு என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
வெளியே போகச் சொல்லிவிடுவோம்
அதேநேரத்தில் டிடிவி.தினகரனுக்கு ஆர்கே.நகர் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினகரனோ அல்லது அவரது கோஷ்டியோ ஓட்டு கேட்டு வந்தால் வெளியே போகச் சொல்லிவிடுவோம் என்றனர்.
ஏப்ரல் 15ஆம் தேதி தெரியும்
ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கே ஆதரவு உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. இதன் முடிவு என்ன என்பது ஏப்ரல் 15-ந் தேதியே தெரியவரும்…