200 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்று இன்று (13) மாலை 3.00 மணியளவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை இராணுவம் முழுமையாக நீங்கியவர்கள் எனும் நியாயங்களை முன்வைக்கும், வீரர்களின் வாய்மொழிச் சான்றுகள் எனும் பெயரிலான அறிக்கை ஒன்றே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளது.
கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வைத்து இது கையளிக்கப்படவுள்ளது.
லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாநயக்க, ரியல் அட்மிரல் எச்.ஆர். அமரவீர, ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, மேஜர் ஜெனரல் சீவலி வனிகசேகர, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகிய அதிகாரிகளும் இந்த அறிக்கையை இன்று கையேற்கவுள்ளனர்.
இந்த அறிக்கையை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட முன்னர், இராணுவ அதிகாரிகளினால் நாளை (14) ஜனாதிபதியிடமும் கையளிக்கப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி ரியல் அட்மிரால் சரத் வீரசேகரவினால் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு,அது தொடர்பான விளக்கமும் அளிக்கப்படவுள்ளது.
யுத்தம் முடிந்த இதுவரையான காலப்பகுதியில் இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்படும் வாக்கு மூலம் அடங்கிய முதலாவது அறிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.