எதியோப்பிய தலைநகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கிடங்காக இருந்து வந்த குப்பை கிடங்கு சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சரிவில் சிக்கி மாயமாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிஸ் அபாபா நகரின் செய்தி தொடர்பாளர் டக்மாவிட் மோகெஸ் அளித்த தகவலின் படி சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், என்றும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சரிவு ஏற்பட்ட போது அப்பகுதியில் சுமார் 150க்கும் அதிகமானோர் இருந்ததாக அப்பகுதியை சேர்ந்த அசெஃபா என்பவர் தெரிவித்துள்ளார்.
சரிவில் சிக்கியவர்களில் 37 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அடிஸ் அபாபா நகர தலைவர் திரிபா குமா தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு இப்பகுதியில் குப்பை கொட்டுவது ஆபத்தானது என அறிவிக்கப்பட்டது. சில காலம் இங்கு குப்பை கொட்டுவது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியில் குப்பை கொட்டப்பட்டது.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.