எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகன் சந்திரன் அண்ணா- எம்ஜிஆர்- அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. அதாவது சசிகலா அணி, ஓபிஎஸ் அணி. இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அடுத்து ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து பணியாற்ற போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்தார்.
எனினும் ஜெயலலிதா பிறந்த நாள் எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார் தீபா. பின்னர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தம் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
பலமுனைப் போட்டி
ஆர்.கே. நகர் தேர்தலில் பலமுனை போட்டி நிலவி வரும் நிலையில் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகன் சந்திரன் புதிதாக ஒரு அரசியல் கட்சியை நேற்று திருச்சியில் தொடங்கினார்.
கஷ்டப்படாமல் கட்சிப் பெயர்
அதற்கு அண்ணா- எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டுள்ளார். அதற்கான கொடி மற்றும் தொழிற்சங்க கொடியையும் அறிமுகப்படுத்தினார். கறுப்பு, சிவப்பு வண்ணத்தில் அமைந்த கொடியில், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
போராட்டம் நடத்த வேண்டும்
இதுகுறித்து சந்திரன் பேசுகையில், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என்றால் அதற்கு போராட்டம் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்.
அதிமுக தொண்டர்களை இணைத்து
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக்க வலியுறுத்துவோம். தமிழக முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து உள்ளாட்சி தேர்தலில், ஒரே சின்னத்தில் போட்டியிட முயற்சிப்போம் என்றார்.