இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, கனடாவின் போஸ்பிசிலிடம் நேர் செட்டில் வீழ்ந்தார்.
முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி அரங்கேறியது. 2-வது சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, கனடாவின் தகுதி நிலை வீரர் வாசெக் போஸ்பிசிலை எதிர்கொண்டார். அனுபவ வீரர் முர்ரேவை திணறடித்த போஸ்பிசில் 6-4, 7-6(7-5) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று ஆச்சரியம் அளித்தார். உலக தரவரிசையில் 129-வது இடம் வகிக்கும் போஸ்பிசில், முர்ரேவை 5-வது முறையாக சந்தித்து அதில் ருசித்த முதல் வெற்றி இதுவாகும். இந்த ஆட்டம் 1 மணி 50 நிமிடங்கள் நீடித்தது.
தோல்விக்கு பிறகு முர்ரே கூறுகையில், ‘இங்கு நன்றாகத்தான் பயிற்சி மேற்கொண்டேன். தோல்விக்கு என்ன காரணம் என்பது துல்லியமாக தெரியவில்லை. எனது சர்வீஸ் நன்றாக அமையவில்லை’ என்று விரக்தியுடன் கூறினார்.
26 வயதான போஸ்பிசில் கூறும் போது, ‘உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தியது நம்ப முடியாத ஒன்று. எனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எல்லாமே திரிலிங்காக இருக்கிறது’ என்றார்.
இதே போல் 43-ம் நிலை வீரர் இத்தாலியின் பாபியோ போக்னினி 7-6 (4), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பிரான்சின் சோங்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), மான்பில்ஸ் (பிரான்ஸ்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), தாமஸ்பெர்டிச் (செக்குடியரசு), ராபர்ட்டா பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஆன்ட்ரியா பெட்கோவிக்கை பந்தாடினார். ருமேனியா நாட்டின் சிமோனா ஹாலெப் தன்னை எதிர்த்து ஆடிய டோனா வெகிச்சை (குரோஷியா) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் விரட்டினார். அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்ஸ்), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), லூசி சபரோவா (செக்குடியரசு) ஆகியோரும் 2-வது சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.
இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்திய மங்கை சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவாவுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ளார். இவர்கள் 2-வது சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் சாரா எர்ரானி (இத்தாலி)- ரோசோல்கா (போலந்து) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு நுழைந்தனர்.
ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ இணை 3-6, 4-6 என்ற நேர் செட்டில் ஜிலெஸ் முல்லர் (லக்சம்பர்க்)- சாம் குயரி (அமெரிக்கா) ஜோடியிடம் தோற்று வெளியேறியது.