பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பதும் ஒரு புரட்சியே! பிரதமர்

பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதும் ஒரு வகையான புரட்சியே என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடு பற்றி சிந்தித்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல்வாதிகளே இன்று நாட்டுக்கு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 1917ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் 100 வருட நிறைவாண்டு வைபவத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர்

அனைவரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை ஊடாக நாட்டை முன்னேற்ற எதிர்பார்த்திருக்கின்றோம். இதற்கு மக்களின் ஆதரவு அவசியமாகும் என்றும் பிரதமர் கூறினார்.

ஒக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து உலகில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. அனைத்து துறைகளுக்கும் இந்த புரட்சி தாக்கம் செலுத்தியது. இலங்கையில் கடந்த காலங்களில் இரண்டு புரட்சிகள் இடம்பெற்றதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தமையும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து அரசாங்கம் அமைத்தமையும் அந்த இரண்டு புரட்சிகளாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.