மேற்குலகின் தேவைக்காக அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு, ஒற்றை ஆட்சிக்கு முடிவு! மஹிந்த குற்றச்சாட்டு!!

மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமையவே அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு போன்றவற்றை அரசாங்கம் துரிதப்படுத்துகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசியலமைப்பு சபையின் ஆறு உபக்குழுக்களின் அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டமை, நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான அலுவலகங்களின் அறிக்கைகள் வெளியாக்கப்பட்டமை என்பன, ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த நிபந்தனைகளாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் அமுலாக்கவுள்ள புதிய சட்டமும், அவ்வாறான நிபந்தனைகளில் ஒன்று. இவ்வாறான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி அரசாங்கம் ஒற்றையாட்சிக்கு முடிவுகட்ட முனைவதாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.