ஜனாதிபதிக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர முடியுமா?

நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாத என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனுவொன்று தொடர்பில் இவ்வாறு சுதந்திரக் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், இந்த மனுவில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இந்த மனுவானது நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக மறைமுகமாக தாக்கல் செய்யப்பட்ட மனு என சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கெஸ்பேவ நகரசபையின் நகர பிதா அருன பிரியசாந்த மற்றும் ஒர் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவில் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்ட நீதிமன்றமொன்றில் தேர்தல் ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மேலும் மனுவில் கோரப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலனை செய்த கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் சுஜீவ நிசாங்க, வழக்கை எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.