ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடாதே என மிரட்டல்… தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கிறார் தீபா!

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது தொடர்பாக தீபா ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பல்வேறு அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது ஏப்ரல் 12-ஆம் தேதி காலியாகவுள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பலமுனை போட்டி நிலவும் இந்த தேர்தலில் தான் தொடங்கிய தீபா பேரவையும் போட்டியிடவுள்ளதாக தீபா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் தீபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் கூறினார். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பின்னர் இந்தப் புகாரைக் கூறினார்.

கூலிப்படையினரை வைத்து தன்ன மிரட்டுவதாக அவர் கூறியிருந்தார். தற்போது இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம் தீபா.