டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் (நவீன வரலாறு) பயின்று வரும் சேலத்தைச் சேர்ந்த முத்துக் கிருஷ்ணன் என்ற மாணவர் இன்று தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள முனிர்கா விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களிடம் உறங்க செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் வெகுநேரமாக அறையை தட்டியும் திறக்காததால், போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்த போது, முத்துக்கிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து முத்துக்கிருஷ்ணன் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள பல்கலைக்கழகம் தூண்டுதலாக இருந்ததா என்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு ஏதும் சிக்காததால், தனது தனிப்பட்ட பிரச்சினையால் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். எனினும் இந்த சம்பவம் குறித்த அனைத்து தடயங்களும் சேகரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.