14-3-2017 (இன்று) காரடையான் நோன்பு
திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் தவறாமல் வேண்டிக்கொள்வது, தங்களில் மாங்கல்ய பலம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. அவர்களின் இந்த வேண்டுதலை நிறைவேற்றும் விரதமாக இருக்கிறது ‘காரடையான் நோன்பு’ என்னும் விரதம். கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கூட இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
மாசி மாதத்தின் முடிவிலும், பங்குனி மாத தொடக்கத்திலும் இந்த விரதம் கடைப் பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தின் போது, திருமணமான பெண்கள் அனைவரும், தங்கள் மாங்கல்யக் கயிறை, புதியதாக மாற்றிக்கொள்வார்கள்.
இந்த விரதம் எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்..
அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு முறை காட்டில் சத்தியவானைச் சந்தித்தாள். கண் தெரியாத தாய்- தந்தையரை பண்போடு கவனித்து வந்த அவனது செய்கை, சாவித்திரிக்கு பிடித்துப் போனது. அவனையே திருமணம் செய்வதாக முடிவு செய்தாள். இதுபற்றி தனது தந்தையிடம் கூறினாள். அந்த நேரத்தில் அங்கு வந்த நாரதர், ‘சத்தியவான் சிறந்த குணவான். ஆனால் அவனது ஆயுள்காலம் இன்னும் ஓராண்டுகளே உள்ளது’ என்றார்.
சாவித்திரி அதைப் பற்றி கவலைப்படவில்லை. ‘மனித வாழ்வில் இன்ப துன்பங்கள் வந்து போகத்தான் செய்யும். அதை எதிர்கொள்வதில்தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது’ என்றாள்.
மகளின் விருப்பப்படியே சத்தியவான்- சாவித்திரி திரு மணத்தை நடத்தி வைத்தார் அஸ்வபதி. திருமணத்திற்கு பிறகு, காட்டிற்கு போய் தனது கணவனுடன் தங்கியிருந்தாள் சாவித்திரி. மாமனார், மாமியாரை அன்போடு கவனித்துக் கொண்டாள். இந்த நிலையில் சத்தியவானின் இறப்பு காலம் நெருங்கியது. அவனது இறுதிநாள் என்று குறிக்கப்பட்ட தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக சாவித்திரி ஒரு விரதத்தை மேற்கொண்டாள். மூன்று நாட்கள் இரவும், பகலும் விழித்திருப்பதுடன், உணவருந்தாமல் அந்த விரதத்தை கடைப்பிடித்தாள். இறுதிநாளின் போது கணவனை விட்டு பிரியாமல் கூடவே இருந்தாள். அவர்கள் இருவரும் காட்டில் பழங்களை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த சத்தியவானின் உயிர் பிரிந்தது.
சத்தியவானின் உயிரை எடுத்துச் செல்வதற்காக எமதர்மன் வந்தார். பதிவிரதை என்பதால், சாவித்திரியின் கண்களுக்கு எமனின் உருவம் தெரிந்தது. கணவனின் உயிரை எடுத்துக் கொண்டு தன் வழியில் சென்ற எமதர்மனை, பின் தொடர்ந்தாள் சாவித்திரி. இதைக் கண்ட எமதர்மன், ‘உனக்கு என்ன வேண்டும்?. எதற்காக என்னைப் பின்தொடர்கிறாய்?’ என்று கேட்டார்.
அதற்கு சாவித்திரி, ‘நான் இவ்வளவு நாள் இருந்த விரதத்தை கருத்தில் கொண்டு, என் கணவனின் உயிரைத் திரும்பித்தர வேண்டும்’ என்றாள்.
‘இல்லை பெண்ணே! இறந்தவரின் உயிரைத் திரும்பித் தருவதென்பது நடவாத காரியம். உனக்கு வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேள்’ என்றார் எமதர்மன்.
சமயோசித புத்தி கொண்ட சாவித்திரி, ‘அறத்தின் தேவதையே! எனது மாமனாருக்கு கண் தெரிய வேண்டும். அவரது நாடு மீட்கப்பட வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்’ என்றாள்.
அவள் கேட்ட வரத்தை தந்துவிட்டதாக கூறிய எமதர்மன் அங்கிருந்து புறப்பட்டார்.
ஆனாலும் சாவித்திரி, எமதர்மனை பின் தொடர்ந்தபடியே இருந்தாள். இதைப் பார்த்த எமன், ‘நீ கேட்ட வரத்தை தந்த பிறகும், என்னைப் பின் தொடர்வதில் நியாயம் இல்லை’ என்றார்.
‘சரிதான்.. நான் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டீர்கள். ஆனால் நான் நூறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள, எனக்கு என் கணவர் உயிருடன் வேண்டுமே..’ என்றாள்.
அவளது புத்திக்கூர்மையைக் கண்டு மகிழ்ந்த எமதர்மன், சத்திய வானின் உயிரைத் திரும்பிக் கொடுத்து அவர்கள் இருவரையும் வாழ்த்தி மறைந்தார். நூறு குழந்தைகள் வேண்டும் என்று சாவித்திரி கேட்ட வரத்தின் பலன் காரணமாக, சத்தியவானும், சாவித்திரியும் நானூறு ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றனர்.
தன் கணவனுக்காக சாவித்திரி இருந்த விரதமே, ‘காரடையான் நோன்பு’ என்று அழைக்கப்படுகிறது.
விரதம் இருப்பது எப்படி?
இந்த விரதத்தின் போது வீட்டை தூய்மை செய்து மாக்கோலம் இட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கலசம் வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அந்த அம்மனை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும்.
சாவித்திரி காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து அம்பாளுக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். எனவே இந்த விரதத்தின் போது கார் நிலத்தில் விளைந்த நெல்லைக் குத்தி, அதில் கிடைக்கும் அரிசியை அரைத்து மாவாக்கி அடை தயாரித்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.
இதனால்தான் இந்த நோன்புக்கு ‘காரடையான் நோன்பு’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பூஜையின் போது நோன்பு சரடை அம்மனுக்கு சாத்தி வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு பிறகு, மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும். பிறகு மூத்த பெண்கள், தானும் மஞ்சள் சரடை கட்டிக் கொண்டு அம்மனை வணங்கி, அடையை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.