ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் அவர் களம் இறங்கும் 6-வது வரிசையில் யார் இடம் பெறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்செல் மார்ஷ் இடத்தில் இடம் பெற மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆஸ்டன்நதர், உஸ்மான் குஹஜா ஆகிய 4 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. ஸ்டோனிஸ் இதுவரை டெஸ்டில் விளையாடவில்லை. மேக்ஸ்வெல் டெஸ்டில் விளையாடி 3 ஆண்டுகள் ஆகிறது.
உஸ்மான் குஹஜா தொடக்க வீரர் வரிசையில் விளையாடுபவர் என்பதால் அவருக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.