2015 ல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை செயற்படுத்த இலங்கை மேலும் இரு வருடங்கள் கால அவகாசம் கோரியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் லங்கா பொதுஜன முன்னணி தலைவருமான ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் முயற்சியை சர்வதேச நாடுகள் இன்னும் கைவிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொரளை வஜிராராம மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்:
வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதியும், பிரதமரும் கூறி வருகின்றனர். ஆனால் ஜெனீவா பிரேரணையின் ஆறாவது பிரிவில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறானால் குறித்த பிரிவை மாற்ற வேண்டும்.தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் ஆட்சியில் அதற்கான அவகாசம் உள்ளது. அதனை பயன்படுத்த முடியும்.
பொருளாதார நெருக்கடியுடன் பொருட்கள் சேவைகளின் விலைகள் உயர்ந்து வருகிறது.தேசிய வளங்களை விற்பதற்காக எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திட பேச்சுவார்த்தையும் நடாத்தப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருவதோடு ஆர்ப்பாட்டம் நடத்த தனியான பிரதேசம் அறிவிக்க எடுக்கப்படும் முயற்சிகள் அடக்குமுறைக்கான எதிரொலிகளே.
நடப்பு பிரச்சினைகளை பேசுவதால் தினேஷ் குணவர்தன எம்.பி.யை வெளியில் தள்ளியதோடு வேறு நபரை நியமிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.
அரசாங்கம் அபகீர்த்திக்குள்ளாகும் போது எதிர்க்கட்சி தலைவர் தான் எதிரணிகளின் தரப்பு தலைவராக செயற்படுவார். ஆனால் உலகில் எந்த எதிர்க் கட்சி தலைவரும் செய்யாதவாறு அரசின் வரவு செலவுத் திட்டத்தை எதுவித திருத்தமும் இன்றி ஆதரித்த ஒரே எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனே.
தினேஷ் குணவர்தனவை வெளியேற்றவும் இவரே வாக்களித்தார்.