வடக்கில் பின்தங்கிய கிராமங்களை இலக்கு வைத்து நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், மத்திய வங்கியினால் பதிவு செய்யப்பட்ட 30 வரையான நிதி நிறுவனங்கள் வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் அதிக வட்டிக்கு கடன் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், வறிய குடும்பங்களை இலக்கு வைத்து இவ்வாறு அதிக வட்டிக்கு கடன் வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.
எனினும், கடனை பெற்றுக்கொண்டவர்கள் அதனை வாராந்தம் திருப்பிச் செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான கடன்களால் வடக்கில் குடும்பப் பிரச்சினை அதிகரித்துள்ள அதேவேளை, பலர் அண்மைய காலங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே, வடக்கில் பேராபத்தாக மாறியுள்ள இந்தக் கடன் திட்டம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களை தெளிவூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதனை அனைத்து தரப்பினரும் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.