விடுதலைப்புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொறுப்புகூற வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்த இராணுவத்தினர், மனித உரிமை மீறல்களை முன்னெடுக்கவில்லையென தெரிவிக்கும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கோட்டபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டின் அமைதிக்காக உயிரை பணயம் வைத்து பேராடிய இராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் செயற்பாட்டினை அரசாங்கத்துக்கு வெளியே உள்ள நிபுணர்குழு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேசப்பற்றுள்ள பொதுமக்கள் தங்கள் இராணுவவீர்ர்களை காப்பாற்றுவதற்காக பல ஆதாரங்களுடன் கூடிய அறிக்கையொன்றை தயாரித்து, அதனை ஜெனிவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமரப்பிக்க திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளின் போது (யுத்தகாலத்தின் போது) பாதுகாப்பு அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கபட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மற்றும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை கண்காணிப்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் சுகாதார அமைச்சு உட்பட பல்வேறு அமைச்சுகளின் செயலாளர்களும், வெளிநாட்டு தூதுவர்கள், ஐ.நா சபையின் இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் ஐ.நா சபையின் கிளை அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர்.
இந்த குழுவில் இருந்த எந்தவொருவரின் வாக்குமூலமும் இலங்கைக்கெதிரான விசாரணைகளில் உள்வாங்கப்படவில்லை.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உரிய வகையில் இலங்கை அரசாங்கம் மக்களுக்கான
அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லையென கூறினால் அதற்கு மேற்குறித்த சர்வதேச அமைப்புகளும் பொறுப்புகூற வேண்டும்.
ஏனெனில் உணவு மற்றும் மருந்து பொருட்களை புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் கொண்டு சேர்த்தது அந்நிறுவனங்களே. ஆகவே தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடும் எமக்கெதிரான குற்றச்சாட்டுகள் உண்மையானதல்ல.
யுத்தம் உச்சகட்டத்தில் சென்றுகொண்டிருந்த போது உலக உணவு அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மாற்றப்பட்டார்.
இலங்கையின் நிலையில் எவ்வித பிரச்சனையும் இல்லையென அறிந்துகொண்டதனாலேயே அவ்வமைப்பு தமது பிரதிநிதியை ஜப்பானுக்கு இடமாற்றம் செய்தது.
இதுபோன்ற நபர்களின் வாக்குமூலங்களை ஏன் சர்வதேச விசாரணைகளின் போது பெற்றுக்கொள்ளவில்லை?. சர்வதேசத்தில் எற்படும் மாற்றங்களை இவ்வரசாங்கம் சூட்சமமான முறையில் கையாள பழகிக்கொள்ள வேண்டும்.
இலங்கைக்கெதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தீர்மானங்களை கொண்டுவந்த சமந்த பவர் போன்ற அமெரிக்க பிரநிதிகளை அமெரிக்காவின் புதிய அரசாங்கம் அப்பதவிகளிலிருந்து நீக்கியுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் நாங்களே எமக்கெதிரான தீர்மானத்தை பலப்படுத்துவது எமது வெளிவிவகார அமைச்சு உட்பட அரசாங்கத்தின் கையாளாகாத தனமாகும்.
அத்தோடு அன்று மனிதஉரிமை மீறல் செயற்பாடுகள் மேற்கொண்ட நபர்களே, இன்று மனித உரிமைகள் பற்றி பேசுகின்றன.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பக்கம் இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சி, அக்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புகூற வேண்டும் என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.