அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபராக பொறுப்பேற்றால் அதிபருக்கான சம்பளத்தை பெற மாட்டேன் என கூறியிருந்தார். ஆனால், அதிபராக இருப்பவர் கண்டிப்பாக சம்பளம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அமெரிக்க அரசியல் சாசனத்தில் உள்ள விதி என அப்போது சிலரால் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்நிலையில், டிரம்புக்கு வழங்கப்படும் ஆண்டு சம்பளமான சுமார் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை இந்த வருடத்தின் இறுதியில் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அளித்த உறுதிமொழியை டிரம்ப் நிறைவேற்றியுள்ளதாகவும் ஸ்பைசர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான்.எப்.கென்னடி தன்னுடைய பதவிக் காலத்தில் இதே போல சம்பளத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்தார் என்பது கூறிப்பிடத்தக்கது.