7 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவிற்கு வரும் வங்காளதேச பிரதமர்

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஏப்ரல் 7,8,9,10 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

7-ம் தேதி இந்தியா வரும் ஷேக் ஹசினா, 8-ம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கவிருக்கிறார். சந்திப்பின் போது வங்காள தேசம்-இந்தியா இடையிலான நட்புறவினை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டீஸ்டா நதிநீர் பிரச்சினை குறித்து மோடியிடம் ஹசினா பேசுவார் என கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹசினா இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவரின் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக 2010-ம் வருடம் ஹசினா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.