திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இடைத்தேர்தல் களம் படுபரப்படைந்துள்ளது.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டு பக்கம் பிரிந்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார். இதனிடையே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கான விருப்பமனுக்கள் பெறப்பட்டன. 17 பேர் போட்டியிட விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கான நேர்காணல் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேர்காணல் நடத்தினர். இதில், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே. நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், சுந்தர்ராஜன், சுவிஸ் ராஜன், காமராஜர் பேத்தி மயூரி, ஏ.டி.மணி, ரோஸ் பொன்னையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று மாலை கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் விவாதித்தோம். திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கான திமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.
மேலும், ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தவரை யாரையும் போட்டியாக கருதவில்லை என்றும் மக்கள் செல்வாக்குடன் திமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.