டிடிவி தினகரன் தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை அளித்து வருவதாகவும், தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக பேசினால் அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியது இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எங்களது அணிக்கும்- திமுகவுக்கும் இடையே தான் போட்டி எனவும் எங்கள் தரப்பிலான ஆட்சிமன்றக் குழு கூடி விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் எனவும் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது டிடிவி தினகரன் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்தாக கூறும் கருத்துக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
டிடிவி தினகரன் தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை அளித்து வருவதாகவும், தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக பேசினால் அதற்கான விளைவுகளை டிடிவி தினகரன் சந்திக்க வேண்டி வரும் என்றும் கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமது பணிகளை செய்யாமல், ஓபிஎஸ் மீது தவறான கருத்துகளை கூறி வருவதாகவும், அமைச்சர்கள் தங்களுடைய கையாலாகாத தனத்தை மறைக்கவே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீது குற்றஞ்சாட்டுவதாக கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.