தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட முயற்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து அந்த சங்கத்தினர் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 4 பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று காலை டெல்லி சென்றனர்.

டெல்லி ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் பச்சைநிற வேட்டி மற்றும் தலையில் பச்சைநிற தலைப்பாகை மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்துடன் மெட்ரோ ரெயிலில் ஏறி பிரதமர் மோடி இல்லம் அருகே இறங்கினர். கழுத்தில் மனித மண்டை ஓடு தொங்கவிட்டும், கைகளில் மண்சட்டியும் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் லோக் கல்யாண் ரோட்டில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட புறப்பட்டனர்.

ஆனால் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகளை அங்கிருந்து ஜந்தர் மந்தர் பகுதிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் விவசாயிகள் அந்த ரோட்டில் அமர்ந்தும், படுத்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

‘தமிழகத்தில் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அடமானம் வைத்த நகைகள் ஏலம் போய்விட்டன. நஷ்டத்தாலும், வங்கி அதிகாரிகளின் நடவடிக்கையாலும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். எனவே கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. உயிரை மாய்க்கும் நிலை வந்து விட்டது. தமிழகத்தில் உயிர் போவதைவிட டெல்லியில் போகட்டும் என்று இங்கு வந்திருக்கிறோம். எங்களது உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறும். தொடர்ச்சியாக 6 குழுக்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள்’ என்று கூறினார்.