கோவா, மணிப்பூரில் மக்கள் அளித்த தீர்ப்பை பண பலத்தால் பா.ஜனதா திருடி விட்டது: ராகுல்காந்தி

கோவா, மணிப்பூர் மாநிலங்களில் மக்கள் அளித்த தீர்ப்பை பண பலத்தால் பா.ஜனதா திருடிக் கொண்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

அண்மையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் முதல் 2 மாநிலங்களில் பா.ஜனதாவும், பஞ்சாபில் காங்கிரசும் அபார வெற்றி கண்டு ஆட்சியை கைப்பற்றின.

அதே நேரம் மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டது. இந்த 2 மாநிலங்களிலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. என்றபோதிலும் கோவாவில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா, மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று உடனடியாக ஆட்சி அமைத்து விட்டது. இதேபோல் மணிப்பூரிலும் ஆட்சி அமைக்கிறது.

இதற்கு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அவர் முதல் முறையாக டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எல்லோருக்குமே ஏற்ற, இறக்கங்கள் ஏற்படுவது இயல்புதான். இந்த முடிவுகள் மோசமானவை அல்ல. எங்களுக்கு உத்தரபிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் சற்று பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். அதே நேரம் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். உத்தரபிரதேசத்தில் வாக்காளர்கள் இடையே பிளவை பா.ஜனதா ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது. எங்களது போராட்டம் பா.ஜனதாவின் சித்தாந்தங்களுக்கு எதிரானது. அவர்களது சித்தாந்தம் மக்கள் தீர்ப்பை திருடி கொள்வது. மணிப்பூரிலும், கோவாவிலும் இதுபோன்ற சித்தாந்தத்தைத்தான் பா.ஜனதாவினர் கையாண்டார்கள்.

கோவாவிலும், மணிப்பூரிலும் பண பலத்தால் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜனதா திருடிக்கொண்டு விட்டது. பா.ஜனதாவின் இந்த செயல் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, நிருபர்கள் கோவாவிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தயக்கம் காட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது:-

இந்த கேள்வி பா.ஜனதா எவ்வளவு வேகமாக செயல்பட்டு மணிப்பூர், கோவா மக்கள் அளித்த தீர்ப்பை திருடிக் கொண்டது என்பது பற்றியது ஆகும். இதை திருடுவதற்கு பா.ஜனதா செலவிட்ட பணம் எவ்வளவு?…

இந்த விஷயத்தில் கோவா கவர்னரும் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டார். காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பாகவே அவர்(கவர்னர்) ஆட்சி அமைக்க அழைப்பதற்கான கடிதத்தை பாரிக்கருக்கு கொடுத்துவிட்டார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே என்னிடம் ஒரு கடிதத்தை காட்டினார். அது பாரிக்கரை முதல்-மந்திரியாக நியமித்தற்கான கடிதம்.

சட்டசபையில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க கூறும் முன்பாகவே, அல்லது இது தொடர்பாக ஏதாவது நிகழ்வதற்குள்ளாகவே கவர்னர் அவசர அவசரமாக நடந்து கொண்டார். அவர் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதால்தான் எங்களால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாமல் போனது.

இவ்வாறு அவர் கூறினார்.