இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. புனே போட்டியை காட்டிலும் பெங்களூரு டெஸ்டில் இரு அணி வீரர்களும் அதிக அளவில் சீண்டிக் கொண்டனர்.
பொதுவாக எந்தவொரு விளையாட்டிலும் அவ்வப்போது எதிரெதிர் அணி வீரர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வது வழக்கம் என்றபோதிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்த மோதல் சற்று தீவிரமாகவே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், பெங்களூர் டெஸ்ட் போட்டியின்போது டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்துவதற்கு பெவிலியனில் இருந்த சக வீரர்களின் உதவியை ஸ்மித் நாடிய விவகாரம் மோதலின் உச்சக்கட்டமாக உருவெடுத்துள்ளது.
விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கூறியதாவது:-
களத்தில் வீரர்கள் மோதிக்கொள்வதைத் தடுக்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஆர்எஸ் விவகாரத்தில் ஐசிசி நடவடிக்கை எடுக்காதது நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எதிர்காலத்தில் களத்தில் வீரர்களின் மோதல்களை மேலும் அதிகரித்து ஒரு நாள் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.
கடந்த காலங்களில் களத்தில் வீரர்கள் மோதிக்கொண்டபோது ஒழுங்கு நடவடிக்கைகளை முறையாக எடுத்திருந்தால் தற்பொழுது வீரர்கள் மோதிக்கொள்ளும் நிலையே இருந்திருக்காது. களத்தில் வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு கேப்டனாக கோலி தனது உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது.
இவ்வாறு இயன் சேப்பல் வலியுறுத்தியுள்ளார்.