இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
புனே மைதானத்திற்கு இதுதான் முதல் டெஸ்ட். இதனால் ஆட்டம் ஐந்து நாட்கள் நீடிக்கும் வகையில் ஆடுகளம் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் பந்து முதல் ஓவரில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
2-வது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு ஆடுகளம் முதல் மூன்று நாட்கள் பேட்டிங் செய்ய அதிக அளவில் ஒத்துழைக்கும். 4-வது மற்றும் ஐந்தாவது நாளில் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும். ஆனால் ஆட்டம் 4-வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாளில் இருந்து ஆடுகளத்தில் பந்து திடீரென பவுன்சராகவும், திடீரென தாழ்வாகவும் சென்றது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடுமையான தடுமாறினார்கள்.
3-வது போட்டி நாளை மறுநாள் (16-ந்தேதி) ராஞ்சியில் தொடங்குகிறது. ராஞ்சிக்கு இதுதான் முதல் டெஸ்ட் ஆகும். இந்த ஆடுகளமும் பந்து டர்ன் ஆகும் வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த தொடருக்கான ஆடுகளம் அமைக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய அணி கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘பெங்களூரு ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தது. இது எனக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. புனே ஆடுகளத்தை விட மிக மிக மோசமானது. புனே ஆடுகளம் சற்று டர்ன் மட்டுமே ஆகியது. ராஞ்சி ஆடுகளமும் அப்படித்தான் இருக்கப்போகிறது. ராஞ்சியில் மீண்டும் சுழற்பந்து வீச்சாளர்கள்தான் ஜொலிபார்கள். டாஸ் வெல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்’’ என்றார்.