உடலிலுள்ள கழிவுகளை ரத்தத்திலிருந்து சுத்திகரிப்பது, நச்சுப் பொருட்களை போராடி வெளியேற்றுவது போன்றவை தான் சிறுநீரகத்தின் சீரிய வேலையாகும். இதனால் தான் மனிதனுக்கு ஒன்றுக்கு இரண்டாக சிறுநீரகத்தை இறைவன் படைத்திருக்கிறான். சிறுநீரக பாதிப்பை 5 நிலைகளாக பிரிக்கிறார்கள்.
இதில் சிறுநீரகத்தில் வடிகட்டும் வேலையை நெப்ரான்கள் செய்கின்றன. இதன் திறன் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதுதான் 5-ம் நிலை பாதிப்பு எனப்படுகிறது. இந்த 5-ம் நிலையின் போது தான் சிறுநீரக பாதிப்பு வெளியே தெரியத் தொடங்கும்.
சீரான இடைவெளியில் உடல் பரிசோதனைகள் செய்வதன் மூலம் முதல் நிலை பாதிப்பிலேயே உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். 50 வயதை கடந்தவர்கள் மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக்கொள்வது முக்கியம். ரத்த அழுத்தம் சீராக இருந்தால், சிறுநீரகத்துக்கு பாதிப்பு இல்லை.
தினமும் ½ லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறுவது இயல்பான ஒன்று. அதைவிட அதிகமாகவோ குறைவாகவோ போனால் மருத்துவ பரிசோதனை அவசியம். சர்க்கரை நோயாளிகள் ‘சுகர் பிரீ‘ மாத்திரைகளை பயன்படுத்துவது சிறுநீரகத்துக்கு நல்லது. ஆனாலும் அளவுக்கு மீறினால், ‘ஞாபக மறதி‘ பிரச்சினை ஏற்படலாம்.
எந்த நோய்க்கு டாக்டர் மருந்து கொடுத்தாலும், அந்த மருந்து இதயம் மற்றும் சிறுநீரகத்துக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது தானே என்று தயங்காமல் கேட்டுக்கொள்வது நல்லது. ஏனென்றால் இன்று பல நோய்களுக்கு கொடுக்கும் மருந்துகளில் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு பக்கவிளைவுகளை கொடுக்கக்கூடிய ரசாயனங்கள் உள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீரகம் பூரண ஆரோக்கியத்தோடு உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் சுகப்பிரசவம் நடைபெற சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். உணவில் அரிசி உணவை குறைத்து தினமும் ஒருவேளையாவது கோதுமை உணவை எடுத்துக்கொள்ளலாம். பீன்ஸ், அவரைக்காய் இரண்டும் சிறுநீரகத்துக்கு சிறந்த நண்பர்கள். கீரைகளும் பங்காளிகள் தான். இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் ஆரோக்கியம் பெறும்.
சிகரெட்டும், ஆல்கஹாலும் ரத்தத்தின் சுத்தத்தைக் கெடுக்கும். அதனால் சிறுநீரகம் ஓவர் டைம் வேலை செய்யும். தொடர்ந்து மதுவும், சிகரெட்டும் எடுத்துக்கொள்பவர்களின் சிறுநீரகம் திணறும். அவற்றை கைவிடுவது சிறுநீரகத்துக்கான மிகப்பெரிய நன்மை.
தினமும் 40 நிமிடம் வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கும். ரத்தம் சீராக ஓடிக்கொண்டிருந்தால் சிறுநீரகம் சுகமாக இயங்கும்.