சசிகலாவிற்கு அதிகாரமில்லை…. மதுசூதனன் அதிகாரத்தை உறுதிப்படுத்த கேட்டுள்ளோம்: ஓபிஎஸ்!

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியாக யாரும் இல்லாததால் அடுத்த பதவியில் உள்ள அவைத் தலைவர் மதுசூதனனின் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் குறித்து முறையிட தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் நேற்று டெல்லி சென்றனர்.

ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். நஜீம் ஜைதியை சந்திக்க அவர்களுக்கு இன்று பகல் 12 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசினார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பது அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படும் பதவியாகும். ஆனால் சசிகலா அத்தகைய விதிகளை பின்பற்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யவில்லை. எனவே விதிகளை மீறி சசிகலாவின் நியமனத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது.

அதிமுக சட்டவிதிகளின்படி, அசாதாரண சூழ்நிலை நிலவும்போது அதற்கு அடுத்த பொறுப்பில் உள்ள அவைத் தலைவருக்கே கட்சியின் மீது முழு அதிகாரம் உள்ளது. எனவே அவைத் தலைவர் மதுசூதனனின் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

விரைவில் அதிமுகவில் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச் செயலாளரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்வோம். வரும் வெள்ளிக்கிழமை இரட்டை இலை சின்னம் கோரி மனு அளிப்போம் என்றும் கூறினார்.

டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் உள்ளதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அதிமுக என்ற மாபெரும் இயக்கமானது ஒரு குடும்பத்தினரிடம் சென்று விடக் கூடாது என்பதில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தனர். எனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே நாங்கள் போட்டியிடுவோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.