நடை பிணங்களாக வாழ்வதை விட முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் : உறவுகளை தொலைத்தோர் கதறல்

எங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் கண்ணீர்மல்க கூறியுள்ளனர்.

காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தானாக காணாமல் போனோரை தேடுகின்ற நபர்களாக எம்மை சித்தரிக்கின்றனர் எனவும் கூறியுள்ளனர்.

எமது பிள்ளைகளை எம்மிடம் தாருங்கள். எமது பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம்.

சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிக்கின்றோம். இந்த வேதனையை விட அன்று முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் குடும்பமாக இறந்திருக்கலாம்’ என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுதனர்.

இதேவேளை, எட்டாவது நாளாகவும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.