சர்வதேச நீதி விசாரணை ஊடாகவே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை மீதான குற்றவியல் விசாரணையொன்றை வலியுறுத்திக்கொண்டிருந்த அதேவேளையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு 30/1 இலக்க தீர்மானமானது,

இலங்கை மீதான ஐ.நா அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மட்டுப்பாடுகள் குறித்து ஆழமான கவனம் செலுத்தியிருக்கவில்லை என நாம் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே எச்சரித்திருந்தோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 34ம் அமர்வில் இன்று(15) ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

உண்மையான நடைமுறை அர்த்தத்தில் ஒரு உள்ளகப்பொறி முறையாக இருக்கப் போகின்ற பொறிமுறையொன்றிற்கு, நம்பகத்தன்மையானது எனும் வெளித்தோற்றப்பாட்டைக்காட்டுவதற்காக, சில வெளிநாட்டு ஈடுபாட்டை அந்த 30/1 தீர்மானம் கோரி நின்றது என்பதையும் நாம் அப்போதே வெளிப்படுத்தியிருந்தோம்.

அத்தோடு, நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பானது, ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு அறவே இல்லை என்பதையும் நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.

இப்படியிருந்த போதிலும், 2015 மனித உரிமைப்பேரவை தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்தும் கூட, ஸ்ரீலங்கா அரசாங்கமானது ,உத்தியோகபூர்வமாகவே, விலகி நிற்கின்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஜனாதிபதியினதும் பிரதம மந்திரியினதும் தலைமையிலேயே, இவ்வாறு ஐ.நா மனித உரிமை பேரவைத் தீர்மானத்திலிருந்து ஸ்ரீலங்காவை விலகியிருக்கச்செய்யும் முயற்சிகள் முற்கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறாக, தீர்மானத்தின் கடப்பாடுகளை வாய்மொழி மூலமாக நிராகரிப்பதற்கு மேலாக, அவற்றில் சொல்லப்பட்ட ஒன்றைத்தானும், இதுவரை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதே இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்வாறாக, ஐ.நா தீர்மானத்தை மிகத்தெளிவாக நிராகரித்து, அது தம்மை கட்டுப்படுத்தவே மாட்டாது என ஒரு அரசாங்கம் கூறும்போது, அந்த அரசாங்கத்துக்கு,மேலதிக கால அவகாசம் கொடுப்பதென்பது,

பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில், ஐ.நா மனித உரிமை பேரவையின் மீதான நம்பகத்தன்மையை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும்.

மேலும், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பிரேரிப்பது அல்லது ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரிப்பது போன்ற சர்வதேச நீதி விசாரணைப்பொறி முறை ஒன்றின் ஊடாக மட்டுமே, பெருமளவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டும் ஒரே வழி என நாம் மீண்டும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.