தினகரனுக்கு நிச்சயம் காலி.. சுயேச்சையாக போட்டியிட்டாலும் நானே வெல்வேன்… தீபா உறுதி!

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் நேற்று தங்களது வேட்பாளர்களை அறிவித்த பிறகு ஆர். கே. நகர் இடைத்தேர்தல் அனல் பறக்கத் தொடங்கி விட்டது.

குறிப்பாக அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஓபிஎஸ் அணியினரும், சசிகலா அணியினரும் டெல்லியில் முகாமிட்டு தேர்தல் ஆணையரை சந்தித்து வருகின்றனர்.

இதே போன்று, அத்தை ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் திடீரென அரசியலில் குதித்த தீபாவும் தனது பங்கிற்கு சசிகலா குடும்பத்தினர் குறித்த பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்பாளராக டிடிவி. தினகரன் அறிவிக்கப்பட்டது குறித்து தீபாவிடம் கருத்து கேட்ட போது, கருத்து தெரிவிக்கும் அளவிற்கு தினகரன் முக்கியமான நபர் இல்லை என்று பட்டென்று சொல்லிவிட்டார்.

மேலும், இந்த தேர்தலில் பொதுமக்களால் அவர் நிச்சயம் புறக்கணிக்கப்படுவார் என்றும் கூறினார். எதிர்மறை விளைவுதான்.. அதிமுகவில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இப்போதும் சசிகலா குடும்பத்தினரையே போட்டியிட வைத்திருக்கிறார்கள். இது தேர்தலில் எதிர்மறையான விளைவைத்தான் தரும் என்று தீபா கூறினார்.

அதிமுக சார்பில் சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் போட்டியிடுவதால் எனது வெற்றி உறுதியாகி விட்டது. ஆர்.கே. நகரில் நானே வெற்றி பெறுவேன் என்று தீபா நம்பிக்கைத் தெரிவித்தார்.

விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வேன் என்றும் அவர் கூறினார். சுயேச்சையானாலும்… தான் தொடங்கியுள்ள பேரவையை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தீபா தெரிவித்தார்.

இதனால் அவர் ஆர்.கே. நகரில் சுயேச்சை வேட்பாளராகவே கருதப்படுவார். சுயேச்சையாக போட்டியிட்டாலும் வெற்றி அடைவேன் என்று கூறினார் தீபா.